முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்தும், டிடிவி திகனரனின் வருகை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் மறைவையடுத்து அதிமுக தொடர்ந்து குழப்பமான நிலையிலேயே இருந்து வருகிறது. முன்னதாக இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் புகாரில், டிடிவி தினகரனை போலீஸார் கைது செய்தனர். அந்த சமயத்தில் அதிமுக-வின் இரு அணிகளும் இணைவதற்காக, கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்குவதாக தெரிவித்தார் டிடிவி தினகரன்.
ஆனாலும், இரு அணிகளும் இணைவதாக தெரியவில்லை. பின்னர் ஜாமினில் வெளிவந்த டிடிவி தினகரன், சிறையில் உள்ள அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவை சிறையில் சென்று சந்தித்தார். இதன் பின்னர் டிடிவி தினகரன் அறிவித்தது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதற்காகவே கட்சிப் பணியில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருந்தேன். ஆனாலும், இரு அணிகளும் இணையவில்லை என்று கூறினார். இரு அணிகளும் இணைவற்கு 60 நாட்கள் கெடு விதித்த டிடிவி தினகரன், இரு அணிகள் இணையாததையடுத்து மீண்டும் கட்சிப் பணியாற்றுவேன் என்று அறிவித்தார்.
சில நாட்களுக்கு முன்னர், டிடிவி தினகரன் கூறும்போது, கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைவதற்கு எங்கள் குடும்பம் தடையாக இருப்பதாக சில நண்பர்கள் தெரிவித்தனர். அதனால் தான் கொஞ்ச நாட்கள் நான் கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பதாக கூறியிருந்தேன். தற்போது, கட்சியை ஒன்றிணைத்து, கட்சியை பலப்படுத்துவதும் மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்குவதுமே எனது நோக்கம் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 5-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது.
இந்த நிலையில்,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுக்கு நேற்று அவசர அழைப்பும் விடுக்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டம் தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி திகரனின் வருகை குறித்தும், இரு அணிகள் இணைவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பலாம் என்பதால், இந்த கூட்டம் முக்கித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.