ராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் அன்வர்ராஜா மற்றும் தமிழக அமைச்சர் மணிகண்டன் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. என்னை எதிர்த்தால் உண்டு இல்லை என்று செய்துவிடுவேன் என்று அமைச்சர் மணிகண்டன் பேசியிருப்பது மூலம் அதிமுக-வினுள் கோஷ்டி பூசல் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ராமநாதபுரம் அரண்மனைப்பகுதியில் அ.தி.மு.க., வின் 46-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு பேசும்போது: :2016-ம் ஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினராக ஆனது முதல் தற்போது வரையில் தொகுதியில் ரூ.2.50 கோடி மதிப்பிலாள வளர்ச்சிப் பணிகளை செய்திருக்கிறேன் என்றார்.
பின்னர் ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர் அன்வர்ராஜாவை, அமைச்சர் மணிகண்டன் தாக்கி பேசினார். அப்போது கடந்த பொதுக்கூட்டத்தில் (அன்வர்ராஜா எம்.பி.,) பேசியபோது, பல நலத்திட்டங்கள் அவரால் நடந்தது என்றும், என்னை குறை கூறியும் பேசியிருக்கிறார். இது அவரின் பகுக்குவமின்மையையே காட்டுகிறது.
என்னிடம் மரியாதையாக நடப்பவர்களிடம், பணிவுடன் நடந்து கொள்வேன். என்னை எதிர்த்தால் உண்டு, இல்லை என பார்த்துவிடுவேன் என்றார்.
கோஷ்டி பூசல்: கடந்த பொதுக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் அன்வர்ராஜா பேசும்போது: அமைச்சசர் மணிகண்டனை குறை கூறி பேசினார். பல நலத்திட்டங்கள் தன்னால் நடந்தது என்றும், மத்திய அரசிடம், மாநில அமைச்சர் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது என்றும் கூறியிருந்தார். மேலும், மத்திய அரசிடம் அரசு மூலமாக தான் தொடர்பு கொள்ள முடியும் என்பது கூட தெரியாத நிலையில் அமைச்சராக இருக்கிறார் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் அமைச்சர் மணிகண்டன் இவ்வாறு பேசினார். என்னை எதிர்த்தால் உண்டு இல்லை என்று பார்த்துவிடுவேன் என்று அமைச்சர் மணிகண்டன் பேசியிருப்பது மூலம் அதிமுக-வினுள் கோஷ்டி பூசல் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.