Advertisment

ஆர்.கே.நகரில் அதிமுக அபிமானிகள் 'மிஸ்டு கால்’ கொடுக்கணுமாம்..! எதற்காக இந்த வியூகம்?

ஆர்.கே.நகரில் மிஸ்டு கால் மூலமாக வாக்குகளை சேகரிக்கும் வியூகத்தை வகுத்திருக்கிறது அதிமுக.! ஆனால் எதற்காக இந்த வியூகம்? என எதிர் தரப்பு சர்ச்சை கிளப்புகிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
RK Nagar, RK Nagar ByPoll, ECI, AIADMK IT Wing, AIADMK, E.Madhusudhanan, T.T.V.Dhinakaran, Marudhu Ganesh, Missed Call,

ஆர்.கே.நகரில் மிஸ்டு கால் மூலமாக வாக்குகளை சேகரிக்கும் வியூகத்தை வகுத்திருக்கிறது அதிமுக.! ஆனால் எதற்காக இந்த வியூகம்? என எதிர் தரப்பு சர்ச்சை கிளப்புகிறது.

Advertisment

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வருகிற 21-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதிமுக வேட்பாளர் இ.மதுசூதனன், திமுக வேட்பாளர் மருது கணேஷ், சுயேட்சையான டி.டி.வி.தினகரன் ஆகியோர் இடையே இங்கு கடும் போட்டி நடக்கிறது. நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம், பாஜக.வின் கரு.நாகராஜன் ஆகியோரும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தரப்பும், சுயேட்சையான டி.டி.வி.தினகரன் தரப்பும் பிரசாரக் களத்திலேயே மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதிமுக பேச்சாளர்களில் ஒருவரான ஆவடி குமார் இரு தினங்களுக்கு முன்பு ‘பிரஸ்’ ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் தொகுதிக்குள் உலா வந்தார்.

அந்தக் காருக்குள் பணம் இருப்பதாகக் கூறி டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். ஆனால் உள்ளூர் போலீஸார் அங்கு வந்து டிடிவி அணியினரை விரட்டியடித்தனர். ஆவடி குமாரை அப்போதைக்கு பத்திரமாக அனுப்பி வைத்த அவர்கள், பிறகு அந்தக் காரை மட்டும் கொண்டு வந்து ஒப்படைக்கச் செய்திருக்கிறார்கள்.

டி.டி.வி.தினகரன் தரப்பு குக்கர்களை வினியோகம் செய்வதாக அதிமுக தரப்பும், அதிமுக தரப்பு பணம் வினியோகம் செய்வதாக டிடிவி தரப்பும் பரஸ்பரம் புகார் செய்து வருகின்றனர். இதனால் தொகுதி முழுவதும் பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது.

அதிமுக பிரசாரத்திற்கு அந்தக் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு முழு மூச்சாக பணியாற்றுகிறது. காரணம், இந்தப் பிரிவின் முக்கிய நிர்வாகிகள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள்! தங்கள் தரப்பு மதுசூதனனை ஜெயிக்க வைக்க விதம் விதமாக சிந்தித்து உத்திகளை அரங்கேற்றுகிறார்கள்.

மதுசூதனன் ஆரம்பகாலம் தொட்டு அதிமுக.வில் பொறுப்புகளை வகித்தது, முன்பு இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது அவர் ஆற்றிய பணிகள் என ஒரு வீடியோவை உலவ விட்டிருக்கிறது அதிமுக ஐ.டி. விங்க்! ஆர்.கே.நகர் தேர்தலுக்காகவே ஒரு ‘தீம் சாங்’ வெளியிட்டது, மதுசூதனன் பிரசாரம் தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்களை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பதிவு செய்வது என படு மும்முரமாக அதிமுக ஐ.டி. விங்க் இயங்குகிறது.

ஆர்.கே.நகர் மக்களின் குறைகளை தெரிவிக்கும் விதமாக அண்மையில் இங்கு பிரசாரத்திற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனி இணையதளத்தை தொடங்கி வைத்தனர். இது தேர்தல் விதிமுறையை மீறிய செயல் என திமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்திருக்கிறார்கள்.

அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த அதிரடியாக, ‘மிஸ்டு கால்’ மூலமாக அதிமுக.வுக்கு ஆதரவு கொடுக்க புதிய செல்போன் எண் ஒன்றை அதிமுக ஐ.டி. பிரிவு வெளியிட்டுள்ளது. ‘மிஸ்டு கால் கொடுங்க, ஆதரவு தெரிவியுங்க’ என குறிப்பிட்டு ‘989898671’ என்ற செல்போன் எண்ணை சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்திருக்கிறார்கள்.

அதாவது, அதிமுக.வுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் இந்த செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டுமாம். நாடு முழுவது பாஜக.வினர் கட்சிக்கு ஆள் சேர்க்க இதேபோன்ற மிஸ்டு கால் திட்டத்தை அமுல் படுத்தினர். ஆனால் அதிமுக தங்களுக்கு வாக்குகளை சேகரிக்க மிஸ்டு கால் ஸ்கீமை அமுல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதற்குள், ‘மிஸ்டு கால் கொடுக்கிற ஒவ்வொருவர் செல்போனுக்கும் 1000 ரூபாய் ரீ சார்ஜ் செய்யப் போறாங்களாம்’ என்றும், ‘இல்லையில்லை, செல்போன் நம்பர் மூலமாகவே நம்ம அட்ரஸை தெரிஞ்சுகிட்டு கிப்ட் கொடுத்துவிடப் போறாங்களாம்!’ என்றும் தொகுதி முழுக்க செய்திகள் றெக்கை கட்டிப் பறக்கின்றன. இந்த மிஸ்டு கால் திட்டம் மூலமாக சுமார் ஒரு லட்சம் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து அவர்களிடம் உரிய முறையில் ‘பேசி’. இரட்டை இலைக்கு வாக்களிக்க வைக்கும் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய திமுக.வும், டி.டி.வி.தினகரன் தரப்பும் தயாராகி வருகின்றன. இடைத்தேர்தல் வியூகங்களுக்கு ‘நோபல்’ கொடுப்பதாக இருந்தால், நம்மாளுங்களை அடிச்சுக்க யாரும் இல்லை!

 

Marudhu Ganesh E Madhusudhanan Rk Nagar T T V Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment