2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோடி 2வது முறையாக பிரதமரானார். ஆனால், தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு பெரிய ஸ்வீப் செய்து 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் பெற்றது. தேனி மக்களவைத் தொகுதியில் மட்டும் அதிமுக - பாஜக கூட்டணியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். அதனால், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிந்து பிரதமர் நரேந்திர மோடி தனது 2வது ஆட்சிக் காலத்தில் அமைச்சரவை அமைத்தபோது, கண்டிப்பாக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று தமிழக அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் 2வது ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு இடம்கிடைக்காமல் போனது. இந்த எதிர்பார்ப்பு என்பது, ஏதோ, தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே எம்.பி என்ற காரணத்துக்காக மட்டும் எழுந்தது அல்ல.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, முதலமைச்சரான் இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு போராட்ட காலத்தில் இருந்து டெல்லி பாஜக தலைமையுடன் நெருக்கத்தை வளர்த்துக்கொண்டார். தர்ம யுத்தம் நடத்திய காலத்திலும், பிறகு பழனிசாமியுடன் இணைந்து துணை முதலமைச்சராக இருந்த காலத்திலும் பாஜக தலைமையுடன் நல்ல உறவைப் பேணிவந்தார். இதனால்தான் இந்த எதிர்பார்ப்பு எழுந்தது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி தமிழ்நாட்டு வந்தபோது அப்போதும் ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சராவார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிமுகவிலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியிலும் எழுந்தது.
நாடாளுமன்றத்தில் சிஏஏ, என்.ஆர்.சி, முத்தலாக் தடை சட்டம் ஆகியவற்றை ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார் எந்த விமர்சனமும் இன்றி மக்களவையில் ஆதரித்துப் பேசினார். பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். ஆனால், அதிமுக எம்.பி அன்வர் ராஜா மத்திய அரசின் நகர்வை விமர்சித்துப் பேசினார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அது ரவீந்திரநாத் குமாரின் தனிப்பட்ட கருத்து என்று கூறினார்கள். அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் கிட்டத்தட்ட ஒரு பாஜக உறுப்பினர் போலவே நடந்து கொண்டார் என்று அரசியல் நோக்கர்கள் விமர்சனங்களை வைத்தனர். இதனால், ரவீந்திரநாத் குமாருக்கு ஏதாவது ஒரு தருணத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. பாஜக பல ஆண்டுகளுக்குப் பிறகு 4 இடங்களில் வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சூழலில்தான், பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதாக செய்திகள் வெளியானது. இதனால், பிரதமர் மோடியின் அமைச்சரவை விரிவாக்கத்தில் இந்த முறை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று அதிமுகவிலும் குறிப்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. ரவீந்திரநாத் குமார் இந்த முறையும் அமைச்சரவை பட்டியலில் ‘மிஸ்’ ஆனார்.
இதனிடையே, முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததற்கான காரணம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் காரணம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவருடைய கருத்துக்கு பாஜகவில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓ.பி.எஸ் படி மேலே சென்று இந்த பற்றி எரிந்த சர்ச்சையை தண்ணீர் ஊற்றி அணைக்கும் விதமாக, “பாஜக மீதும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் "அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும்". இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.” என்று அறிக்கை வெளியிட்டார்.
இப்படி, ஓபிஎஸ் பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் இணக்கமாக இருந்தபோதிலும், அவருடைய மகன் ரவீந்திரநாத் குமாருக்கு பிரதமர் மோடி அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. 2 அல்லது 3 முறை இந்த எதிர்பார்ப்பு எழுந்தபோதும் அமைச்சரவையில் இடம் கிடைக்காதது ஏன், இது அதிமுகவுக்கு எந்த அளவுக்கு நஷ்டம் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம்.
அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்கு கூறியதாவது: “பிரதமர் மோடி எப்போதும் தன்னுடைய லாபத்துக்காகவும் பாஜக லாபத்துக்காவும்தான் அரசியல் பண்ணுவார். ரவீந்திரநாத்தை அமைச்சராக்குவதன் மூலம் மோடிக்கு எந்த ஸ்பெஷல் லாபமும் இல்லை.
இங்கே எல்.முருகனை அமைச்சராக்குகிறார் என்றால் அதற்கு காரணம் இங்கே அருந்ததியர்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் இல்லை. அதனால், அருந்ததியர்கள் ஓட்டு பாஜகவில் ஒருங்கிணையும். அரசியல் முக்கியத்துவம் உள்ள மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு அமைச்சர் கொடுப்பதால் மோடிக்கு புதுசா எந்த லாபம் வந்துவிடப் போகிறது. எந்த லாபமும் இல்லை. ஆனால், அருந்ததியர்களுக்கு அளிப்பதன் மூலம் பலன் இருக்கிறது. அதனால், எல்.முருகனுக்கு கொடுத்திருக்கிறார்.” என்று கூறினார்.
ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படாததால் அதிமுகவுக்கு ஏதேனும் நஷ்டம் இருக்கா என்றதற்கு ரவீந்திரன் துரைசாமி கூறியதாவது: “அதிமுகவுக்கு எந்த நஷ்டமும் இல்லை. அங்கே நிதீஷ் குமார் கட்சிக்கு எல்லாம் நிறைய எம்.பி.க்கள் இருகிறார்கள். அதனால், அமைச்சர் பதவி கொடுத்தார்கள். இங்கே அதிமுகவுக்கு ஒரு எம்.பி பதவிதானே இருக்கிறது. அதனால், கொடுக்கமாட்டார்கள். அமைச்சர் பதவி கேட்க மாட்டார்கள். ஏனென்றால், தம்பிதுரையும் அமைச்சர் பதவி கேட்கிறார். அதனால், அப்படி எதுவும் செய்யமாட்டார்கள்” என்று கூறினார்.
இருப்பினும், அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பிரதமர் மோடி ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சரவையில் இடம் அளிப்பார் என்று இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.