Advertisment

அதிமுக ஆட்சி மன்றக் குழு 9 பேர் பட்டியல் அறிவிப்பு : ஓபிஎஸ் அணிக்கு 3 இடங்கள்

அதிமுக ஆட்சி மன்றக் குழுவின் புதிய உறுப்பினர்களாக 9 பேர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்தப் பட்டியலில் 3 இடங்கள் ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
aiadmk governing body, rk nagar, aiadmk, E.Madhusudhanan, cm edappadi palaniswami, deputy cm o.panneerselvam, jeyalalitha, aiadmk head office

அதிமுக ஆட்சி மன்றக் குழுவின் புதிய உறுப்பினர்களாக 9 பேர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்தப் பட்டியலில் 3 இடங்கள் ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

அதிமுக.வில் அதிகாரம் மிக்க ஒரு குழு, ஆட்சி மன்றக் குழு. அதிமுக.வின் சட்டதிட்ட விதிப்படி வேட்பாளர்களை முடிவு செய்யும் அதிகாரம் இந்தக் குழுவுக்கு உண்டு.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கட்சிக்கு தலைமை தாங்கியபோது, இந்தக் குழுவின் அதிகாரம் வெளியே தெரியவில்லை. காரணம், அப்போது அவர்கள் குறிப்பிடும் நபர்களை வேட்பாளராக தேர்வு செய்து கையெழுத்து போடும் அமைப்பாக ஆட்சி மன்றக் குழு இருந்தது.

ஜெயலலிதா தனது தலைமையிலான ஆட்சி மன்றக் குழுவில், விசாலாட்சி நெடுஞ்செழியன், ஜஸ்டின் செல்வராஜ், தமிழமகன் உசேன் என மிக நம்பிக்கையான சீனியர்களை மட்டுமே தொடர்ந்து இடம் பெறச் செய்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளர் ஆனபோது, ஆட்சி மன்றக்குழு மாற்றி அமைக்கப்பட்டது.

வி.கே.சசிகலா தலைமையிலான அந்த ஆட்சி மன்றக் குழுவில் கே. ஏ. செங்கோட்டையன், டிடிவி தினகரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அ. தமிழ்மகன் உசேன், கழக இலக்கிய அணிச் செயலாளர் பா. வளர்மதி, கழக மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் வேணுகோபால், கழக சிறுபான்மையினர் நலப்பிரிவுத் தலைவர் ஏ. ஜஸ்டின் செல்வராஜ் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

தற்போது சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஓரங்கட்டப்பட்டு, ஓபிஎஸ் அணி உள்ளே வந்திருக்கும் சூழலில் ஆட்சி மன்றக் குழுவை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதுவும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்யவேண்டிய சூழல் இருப்பதால் புதிய ஆட்சி மன்றக் குழு தேவையாகிறது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இதுதான் பிரதான விவாதமாக அமைந்தது. ஆட்சிமன்றக் குழுவில் புதிதாக எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பட்டியலை கே.பி.முனுசாமி கூட்டத்தில் வாசித்தபோது சலசலப்பு ஏற்பட்டது. ஏற்கனவே துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை வகிக்கும் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோருக்கு பதிலாக வேறு சீனியர்களுக்கு இதில் இடம் கொடுக்கலாம் என சிலர் முறையிட்டதாக தெரிகிறது. ஆனால் இபிஎஸ்.ஸும், ஓபிஎஸ்.ஸும் எதிர்ப்பு குரல் எழுப்பியவர்களை சமரசம் செய்தனர்.

கூட்டம் முடிவில் கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி க.பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தமிழ் மகன் உசேன், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜஸ்டின் செல்வராஜ், இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, மருத்துவ அணி செயலாளர் டாக்டர் வேணுகோபால் ஆகிய 9 பேர் ஆட்சி மன்றக் குழுவில் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

அதிமுக ஆட்சி மன்றக் குழுவின் 9 பேர் பட்டியலில், ஓபிஎஸ் அணியில் அவரையும் சேர்த்து 3 பேர் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குழுதான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்ய இருக்கிறது. ஓபிஎஸ் ஆதரவாளரான மதுசூதனனை இந்தக் குழு வேட்பாளராக தேர்வு செய்யுமா? என்பது விவாதம் ஆகியிருக்கிறது.

 

E Madhusudhanan Rk Nagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment