இபிஎஸ்.ஸுக்கு 5 பதவி, வைத்திலிங்கத்திற்கு 3 பதவி.. அதிமுக ஆட்சி மன்றக் குழு கொந்தளிப்பு

அதிமுக.வில் ஏற்கனவே அதிகாரம் மிக்க பதவிகளில் இருப்பவர்களுக்கே ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் பதவிகளையும் ஒதுக்கியிருப்பது சர்ச்சை ஆகியிருக்கிறது.

aiadmk governing body, rk nagar, aiadmk, E.Madhusudhanan, cm edappadi palaniswami, deputy cm o.panneerselvam, jeyalalitha, aiadmk head office

அதிமுக.வில் ஏற்கனவே அதிகாரம் மிக்க பதவிகளில் இருப்பவர்களுக்கே ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் பதவிகளையும் ஒதுக்கியிருப்பது சர்ச்சை ஆகியிருக்கிறது.

அதிமுக.வில் அணிகள் இணைப்பு, இரட்டை இலை மீட்புக்கு பிறகு அதிகாரப் போட்டி உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.
அதிமுக.வில் அதிகாரம் மிக்க ஒரு குழு, ஆட்சி மன்றக் குழு. அதிமுக.வின் சட்டதிட்ட விதிப்படி வேட்பாளர்களை முடிவு செய்யும் அதிகாரம் இந்தக் குழுவுக்கு உண்டு.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கட்சிக்கு தலைமை தாங்கியபோது, இந்தக் குழுவின் அதிகாரம் வெளியே தெரியவில்லை. காரணம், அப்போது அவர்கள் குறிப்பிடும் நபர்களை வேட்பாளராக தேர்வு செய்து கையெழுத்து போடும் அமைப்பாக ஆட்சி மன்றக் குழு இருந்தது.

ஜெயலலிதா தனது தலைமையிலான ஆட்சி மன்றக் குழுவில், அவைத்தலைவர், பொருளாளர் ஆகியோரை தவிர்த்து விசாலாட்சி நெடுஞ்செழியன், ஜஸ்டின் செல்வராஜ், தமிழமகன் உசேன், வேணுகோபால் என மிக நம்பிக்கையான சீனியர்களை மட்டுமே தொடர்ந்து இடம் பெறச் செய்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளர் ஆனபோது, ஆட்சி மன்றக்குழு மாற்றி அமைக்கப்பட்டது.

வி.கே.சசிகலா தலைமையிலான அந்த ஆட்சி மன்றக் குழுவில் கே. ஏ. செங்கோட்டையன், டிடிவி தினகரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அ. தமிழ்மகன் உசேன், கழக இலக்கிய அணிச் செயலாளர் பா. வளர்மதி, கழக மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் வேணுகோபால், கழக சிறுபான்மையினர் நலப்பிரிவுத் தலைவர் ஏ. ஜஸ்டின் செல்வராஜ் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

தற்போது சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஓரங்கட்டப்பட்டு, ஓபிஎஸ் அணி உள்ளே வந்திருக்கும் சூழலில் ஆட்சி மன்றக் குழுவை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதுவும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்யவேண்டிய சூழல் இருப்பதால் புதிய ஆட்சி மன்றக் குழு தேவையாகிறது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பலத்த விவாதங்களுக்கு பிறகு புதிய ஆட்சி மன்றக் குழு அறிவிக்கப்பட்டது.

அதிமுக ஆட்சி மன்றக் குழுவில் இடம் பெற்றவர்கள் பட்டியல் வருமாறு:
1. ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக ஒருங்கிணைப்பாளர்)
2.எடப்பாடி க.பழனிசாமி (இணை ஒருங்கிணைப்பாளர்)
3. இ.மதுசூதனன் (அவைத்தலைவர்)
4. கே.பி.முனுசாமி (துணை ஒருங்கிணைப்பாளர்)
5. ஆர்.வைத்திலிங்கம் (துணை ஒருங்கிணைப்பாளர்)
6.அ.தமிழ் மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்)
7.பா.வளர்மதி (இலக்கிய அணி செயலாளர்)
8.ஏ.ஜஸ்டின் செல்வராஜ் (சிறுபான்மை பிரிவு தலைவர்)
9.டாக்டர் பி.வேணுகோபால் (மருத்துவர் அணிச் செயலாளர்)

ஏற்கனவே முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வைத்திருப்பவர்களுக்கே மீண்டும் இந்தக் குழுவில் பதவி கொடுத்திருப்பதாக குமுறல் கிளம்பியிருக்கிறது. உதாரணத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், தலைமை நிலைய செயலாளர், சேலம் மாவட்டச் செயலாளர், முதலமைச்சர் என ஏற்கனவே 4 பதவிகள் இருக்கையில், 5-வது பதவியாக ஆட்சி மன்றக் குழு பதவி ஒட்டிக் கொண்டிருக்கிறது.

ஓபிஎஸ்.ஸுக்கு ஒருங்கிணைப்பாளர், பொருளாளர், துணை முதல்வர் ஆகிய பதவிகளுக்கு அடுத்தபடியாக ஆட்சி மன்றக் குழு பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ‘எம்.பி.யாக இருக்கும் வைத்திலிங்கத்திற்கு துணை ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தது சரி! அவருக்கேதான் ஆட்சி மன்றக் குழுவிலும் இடம் கொடுக்க வேண்டுமா? இந்தப் பதவியை பண்ருட்டி ராமச்சந்திரன், சீனியரான செங்கோட்டையன் ஆகியோரில் ஒருவருக்கு வழங்கியிருக்கலாம்.

அதேபோல ஏற்கனவே துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை வைத்திருக்கும் கே.பி.முனுசாமிக்கு பதிலாக பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரில் ஒருவருக்கு ஆட்சி மன்றக் குழுவில் இடம் கொடுத்திருக்கலாம்’ என்கிறார்கள், கட்சி வட்டாரத்தில்!

ஜெயலலிதாவால் பதவியில் அமர்த்தப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் ஓபிஎஸ், மதுசூதனன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தமிழ் மகன் உசேன், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜஸ்டின் செல்வராஜ், மருத்துவ அணி செயலாளர் டாக்டர் வேணுகோபால் ஆகியோர் மீண்டும் இடம் பெற்றுவிட்டனர். பெண்களுக்கு பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில் வளர்மதி சேர்க்கப்பட்டிருக்கிறார்.

ஆனாலும் சிலர் மட்டுமே பதவிகளை தங்களுக்கு குவித்துக் கொண்டிருப்பது குமுறலை கிளப்பியிருக்கிறது.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aiadmk new governing body seniors upset on selection process

Next Story
“அதிமுக அரசின் ‘அவுட் சோர்சிங்’ மோசடி!” – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express