கட்சியில் இருந்து சசிகலா நீக்கம் என்பதில் மாற்றம் இல்லை: அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டம்

இரு அணிகளை இணைக்கும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறன்றன. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கட்டுக்கோப்புடன் உள்ளது.

சசிகலா கட்சியில் இருந்து நீக்கம் என எடுக்கப்பட்ட முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக-வில் பிளவு ஏற்பட்டது. முதலமைச்சர் பதவியில் இருந்த பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், வற்புறுத்தலின் காரணமாகவே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக பகீர் பேட்டி அளித்தார் பன்னீர் செல்வம்.

முதலமைச்சராகும் எண்ணத்தில் இருந்த சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். இதையடுத்து, டிடிவி தினகரன் தலைமையில் கட்சி வழிநடத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது, இரட்டை இலை சின்னத்திற்காக ஓபிஎஸ் அணி, சசிகலா தரப்பும் உரிமை கோரின. இதனால், இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. பணப்பட்டுவாடா புகாரினால் ஆர்.கே நகர் தேர்தலையும் ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

இதனையடுத்துதான் டிடிவி தினகரனுக்கு சிக்கல் ஆரம்பமானது. இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் டெல்லி போலீஸார் டிடிவி தினகரனை கைது செய்தனர்.

சசிகலாவும், டிடிவி தினகரனும் சிறையில் இருந்த போது அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது சசிகலா, தினகரனை அதிமுக-வில் இருந்து நீக்குவதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சிறையில் ஜாமீனில் இருந்து வெளியே வந்த டிடிவி தினகரன் கட்சிப்பணிகளில் ஈடுபட தொடங்கினார். அவருக்கு ஆதரவளிக்கும் வகையில் எம்.பி, எம்.எல்.ஏ-க்களும் டிடிவி தினகரனை சந்தித்தனர். கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு டிடிவி தினகரனுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுக-வில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை நீக்குவது தொடர்பான முடிவில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் காட்டிய பாதையில் தான் ஆட்சியும், கட்சியும் செயல்படவேண்டும் என்பதில் கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம். அதிமுக-வில் இருந்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை நீக்குவது தொடர்பான முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை.

அதிமுக-வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், சசிகலா, தினகரனை அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கி வைப்பது என்று முடிவு எடுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை.

அதிமுக-வில் இரு அணிகளை இணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறன்றன. எங்கள் தரப்பில் எந்தவித தடையும் இல்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கட்டுக்கோப்புடன் உள்ளது.

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து, கட்சித் தலைமை முடிவு செய்யும் என்று கூறினார்.

×Close
×Close