டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் மும்பையில் இருந்து சனிக்கிழமை சென்னை திரும்பவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக-வில் தொடங்கிய குழப்பங்கள் உச்சக் கட்டத்திற்கு சென்றுள்ளது. முதலில் இரண்டாக பிளவுபட்ட அதிமுக, பின்னர் மூன்றாக உடைந்தது. இதனிடையே, ஓ பன்னீர் செல்வம் அணி, எடப்பாடி அணி இணைந்துவிட்டால், அதிமுக வலுப்பெறும் என கருதப்பட்டது. ஆனால், இந்த அணிகள் இணைப்பு அதிமுக-விற்கு பாதகமாகவே அமைந்துவிட்டது.
அதுவரை எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு அளித்து வந்த டிடிவி திகனரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள், அணிகள் இணைப்புக்குப் பின்னர் முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்துவிட்டனர்.
இதனால், அரசு கொறடா டிடிவி தினகரன் அணியில் உள்ள 19 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயருக்கு பரிந்துரை செய்யவே, சபாநாயகரும் டிடிவி தரப்பு எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த பரபரப்பான நிலையில், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்திவருகின்றன.
இந்த நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை மாலை சென்னை திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநரின் வருகை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாளை ஆளுநர் என்ன செய்யப்போகிறார் முடிவு எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.