‘லட்டு’ சாப்பிடும் சீனியர் தலைகள்; அதிமுக எம்.பி வேட்பாளர்கள் பின்னணி

அதிமுக தலைமை  சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, தமாக தலைவர் ஜி.கே.வாசன் ராஜ்ய சபா எம்.பி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஜி.கே.வாசன் பெயர் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

By: March 9, 2020, 7:23:17 PM

ராஜ்ய சபாவில் அதிமுகவுக்கு காலியாக உள்ள 3 எம்.பி பதவிகளுக்கு அதிமுக தலைமை  கே.பி.முனுசாமி, தம்பிதுரை, தமாக தலைவர் ஜி.கே.வாசன் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. இதில் ஜி.கே.வாசன் பெயர் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழக ராஜ்ய சபா எம்.பி.-க்கள் 6 பேர்களின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. அதனால், தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்ய சபா எம்.பி. பதவிகளுக்கு வருகிற மார்ச் 26-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்த 6 ராஜ்ய சபா உறுப்பினர் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுக சார்பில் 3 எம்.பி.-க்களும் ஆளும் அதிமுக சார்பில் 3 எம்.பி.-க்களும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளனர். அதனால், திமுக சார்பில் ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டனர். அதில் திருச்சி சிவா மீண்டும் ராஜ்ய சபா எம்.பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ராஜ்ய சபா எம்.பி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

அதிமுகவில் சார்பில் ராஜ்ய சபா எம்.பி.க்களாகப் போவது யார் என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அதிமுக தலைமை ராஜய சபா எம்.பி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அதிமுக சார்பில் ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகிய மூன்று பேரும் எம்.பி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாநில அரசியலில் எடுபடாது என்பதால் டெல்லிக்கு பயணம்

அதிமுக தலைமை அறிவித்துள்ள ராஜ்ய சபா எம்.பி வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து அதிமுக வட்டாரத்தினரிடம் பேசியபோது, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் நடத்தியபோது அவருக்கு ஆதரவாக முதலில் குரல் கொடுத்தவர் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி. அப்போது இவர் சசிகலா குடும்பத்தினருக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இணைந்த பிறகு கே.பி.முனுசாமிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவருக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து, இ.பி.எஸ். உடனும் நெருக்கமாக இருந்துவருகிறார்.

ஆனாலும், கே.பி.முனுசாமி எம்.பி அல்லது எம்.எல்.ஏ பதவியை அடைய வேண்டும் என்று இருந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனால், அந்த வாய்ப்பும் போனது.

அதே நேரத்தில், மாநில அரசியலிலும் பெரிதாக எதுவும் செய்ய முடியாத நிலையில் கே.பி. முனுசாமி டெல்லி அரசியலைக் குறிவைத்து ராஜ்ய சபா எம்.பி. பதவிக்காக காய் நகர்த்தி வந்தார். இப்பொது அவர் ராஜ்ய சபா எம்.பி வேட்பாளராக அறிவித்திருப்பதால் அவர் ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறார் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றனர்.

மீண்டும் டெல்லியை மையமிடும் தம்பிதுரை

கடந்த மக்களவையில் முன்னாள் துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை தேர்தல் நெருங்கிய கால கட்டத்தில் மக்களவையில் பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதனால், தம்பிதுரை பாஜகவின் கோபப் பார்வைக்கு ஆளானார். அடுத்து வந்த 2019 மக்களவைத் தேர்தலில் மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிட்ட தம்பிதுரை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் படுதோல்வி அடைந்தார். தேர்தலுக்குப் பிறகு தம்பிதுரை அமைதியாக இருந்துவந்தார். இந்த நிலையில்தான் அதிமுக தலைமை அவரை ராஜ்ய சபா எம்.பி வேட்பாளராக அறிவித்துள்ளது.

தம்பிதுரை ராஜ்ய சபா எம்.பி வேட்பாளராக அறிவித்திருப்பது குறித்து அதிமுக வட்டாரங்கள் கூறுகையில், “தம்பிதுரை எப்போதும் டெல்லி அரசியலை மையமாகக்கொண்டு செயல்படுபவர். அவர் கடந்த மக்களவைத் தேர்தலில் அடைந்த படுதோல்வி அவருக்கு பெரிய இழுக்காக அமைந்துவிட்டது. அவர் ஆரம்பத்தில் சசிகலா ஆதரவாளராக இருந்தாலும் பின்னர் இ.பி.எஸ்-க்கு நெறுக்கமானவராக சேர்ந்து செயல்பட்டுவருகிறார். அதே நேரத்தில் அதிமுகவுக்கு டெல்லியில் அரசியல் செய்ய நல்லா அறிமுகமான ஒரு சீனியர் தலைவர் தேவை அந்த வகையில் தம்பிதுரை ராஜ்ய சபா எம்.பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், தம்பிதுரை மீண்டும் டெல்லியை மையம் கொள்கிறார்.” என்று தெரிவித்தனர்.

கே.பி. முனுசாமி, தம்பிதுரை இவர்கள் இருவரும் அதிமுக எம்.பி. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் அதிமுகவுக்குள் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், தமாக ஜி.கே.வாசன் ராஜ்ய சபா எம்.பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது அக்கட்சிக்குள் விவாதமாகியுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது, அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமக தேர்தல் ஒப்பந்தப்படி அக்கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி பதவியை வழங்கியது. அதன்படி அன்புமணி ராமதாஸ் ராஜ்ய சபா எம்.பி. ஆனார்.

அப்போது தேமுதிக சார்பிலும் ஒரு ராஜ்ய சபா எம்.பி பதவி கேட்கப்பட்டாலும் அது பற்றி அதிமுக பரிசீலிக்கவில்லை. தேமுதிக சார்பில் அதிமுகவிடம் ராஜ்ய சபா எம்.பி பதவி கேட்டு முயற்சித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அதே போல, பாஜக சார்பிலும் அதிமுகவிடம் ஒரு ராஜ்ய சபா எம்.பி பதவி கேட்பதாக செய்திகள் வெளியானது. இதனை தமிழக மூத்த பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மறுத்தார்.

இந்த நிலையில்தான், அதிமுக சார்பில் ஜி.கே.வாசன் ராஜ்ய சபா எம்.பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜி.கே.வாசனிடம் பெரிய கட்சிகள் எதிர்பார்ப்பது என்ன?

இது குறித்து அதிமுக வட்டாரங்கள் கூறுகையில், “கடந்த மக்களவைத் தேர்தலின்போதே பாமகவைப் போல தேமுதிக ராஜ்ய சபா எம்.பி பதவியைக் கேட்டது. ஆனால், அதிமுக அப்போது எதுவும் சொல்லவில்லை. இப்போது, அதிமுக சார்பில் 3 ராஜ்ய சபா எம்.பி இடங்கள் காலியாகிறது. என்பதை அறிந்து தேமுதிக தரப்பில் ஒரு இடம் கேட்டு பேசப்பட்டது. அதே நேரத்தில், பாஜக தரப்பில் பேசப்பட்டது. என்றாலும் அது மறுக்கப்பட்டது. பாமகவும் தேமுதிகவும் ராஜ்ய சபா எம்.பி பதவி கேட்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அந்தளவுக்கு வாக்கு வங்கி உள்ளது. அதனால், சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில், அதிமுகவினரையும் கூட்டணி கட்சியான தேமுதிக கோரிக்கையையும் புறக்கணித்துவிட்டு ஜி.கே.வாசனுக்கு தந்திருக்கிறார்கள். ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு கூட்டணி கட்சிகளில் எல்.கே.சுதீஷ், ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரின் பெயரும் அடிப்பட்டது என்றாலும் ஜி.கே.வாசனுக்கு வாய்ப்பு குறைவு என்றே கருதப்பட்ட நிலையில் அவர்தான் வெற்றி பெற்றிருக்கிறார். அந்தளவுக்கு அவர் தலைமை கவர்ந்திருக்கிறார்” என்று பொடி வைத்துக் கூறினார்கள்.

அதிமுக ஜி.கே.வாசனை ராஜ்ய சபா எம்.பி வேட்பாளராக அறிவித்திருப்பது குறித்து தமாக வட்டாரத்தினரிடம் பேசியபோது, “ஜி.கே.வாசன் எப்போது கூட்டணி கட்சி தலைவர்களிடம் தனக்கு இது வேண்டும் என்று கேட்டு நெருக்கடி கொடுக்க மாட்டார். கட்சிக்காரர்களை மிகவும் மரியாதையாகவே அழைப்பார். இதனாலேயே அவர் தமாக தொடங்கியபோது காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொருப்பில் இருந்தவர்கள் பலரும் ஜி.கே.வாசனுடன் வந்தனர்.

இந்த பண்பால்தான் அவர் மாற்றுக் கட்சி தலைவர்களிடமும் நன்மதிப்பை நல்ல பெயரையும் பெற்று கவர்ந்து வருகிறார்.

பிரதமர் மோடி சென்னை வந்தபோது விமான நிலையம் சென்று வாசன் வழியனுப்பி வைத்தார். வாசன் அணுகுமுறையில் ஈர்க்கப்பட்ட பிரதமர் மோடி அவரை சந்திப்பதற்கு டெல்லி அழைத்தார். டெல்லி சென்று பிரதமரை மோடியை சந்தித்த வாசன் அப்போதும்கூட தனக்கு எம்.பி பதவி வேண்டும் என்றோ அமைச்சர் பதவி வேண்டும் என்றோ எதையும் கேட்கவில்லை. தமிழகத்தின் கோரிக்கைகளை கூறிவிட்டு தமிழகத்தின் அரசியல் சூழலை மட்டும் பேசிவிட்டு வந்தார்.

தன்னை சந்தித்து தனக்காக எந்த கோரிக்கையும் வைக்காமல் சென்றதே வாசனைப் பற்றி பிரதமருக்கு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இந்த சூழலில்தான் தமிழக பாஜக தலைவர் பதவி காலியானது. கடந்த டிசம்ப மாதமே தமிழக பாஜகவுக்கு தலைவர் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டாலும் இன்னும் நியமிக்கப்படவில்லை. அதற்கு காரணம் பாஜக டெல்லி தலைமைக்கு தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் மீது இன்னும் நம்பிக்கை வரவில்லை. பாஜக நினைத்திருந்தால் தமிழக மாநில பாஜக தலைவர்கள் யாருக்காவது அதிமுகவிடம் ராஜ்ய சபா எம்.பி பதவியைக் கேட்டு வழங்கியிருக்கலாம். ஆனால், ராஜ்ய சபா எம்.பி பதவி ஜி.கே.வாசனுக்கு கிடைத்திருக்கிறது. பிரதமர் மோடியை ஈர்த்துவிட்ட வாசனைத் தேடி கூடிய விரைவில் பாஜக மாநில தலைவர் பதவி கூட வர வாய்ப்பு உள்ளது” என்று கூறி முடித்தார்.

பெரிய கட்சிகள் எப்போதும் கூட்டணி கட்சியினருக்கு ஒரு வெகுமதி தருகிறார்கள் என்றால் ஆதாயம் இல்லாமல் தரமாட்டார்கள். ஜி.கே.வாசனுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி தேடி வருகிறது என்றால் அவரிடம் பெரிய கட்சிகளுக்கு நிறைய எதிர்பார்ப்பு உள்ளது என்றுதானே அர்த்தம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Aiadmk rajya sabha candidates kp munusamy thambidurai gk vasan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X