Advertisment

அதிமுக உட்கட்சித் தேர்தல்: பல மாவட்டங்களில் இந்த முறை போட்டி உறுதி?

உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மீண்டும் அதிகாரப் போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
Balaji E
New Update
AIADMK

அதிமுக அடுத்த 6 மாதங்களில் உட்கட்சி தேர்தலை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மீண்டும் அதிகாரப் போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

அதிமுகவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக இந்த ஆண்டு உட்கட்சி தேர்தல் நடத்துவதற்கு கடந்த ஜூன் மாதம் தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு அதிமுக தலைமை 6 மாதங்கள் அவகாசம் கேட்டு பதில் அனுப்பியது. அதனால், அதிமுகவில் இன்னும் 6 மாதங்களில் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் கடைசியாக 2014ம் ஆண்டு உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது, முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா 1988ம் ஆண்டு அதிமுகவைக் கைப்பற்றிய பின்னர் தொடர்ச்சியாக ஏழாவது முறையாக பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா கட்சியில் இருந்து ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற முயன்றபோது ஓ.பிஎஸ் தர்மயுத்தம் நடத்தி தடை ஏற்படுத்தினார். கூவத்தூர் நிகழ்வுகள் இடையே சசிகலா முதலமைச்சராக இருந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததால் சசிகலா சிறை சென்றார். அவருடைய ஆதரவாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். விரைவிலேயே எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்தனர். சசிகலாவையும் அவரது அக்கா மகன் டிடிவி தினகரனையும் அவர்களது குடும்பத்தினரையும் அதிமுகவில் இருந்து வெளியேற்றினார்கள். அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வருகிறார்கள்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவினாலும் வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இபிஎஸ் தன்னை கட்சியிலும் மக்கள் மத்தியிலும் நிருபித்துள்ளார். தேர்தலுக்கு முன்னதாக, சிறை தண்டனை காலம் முடிந்து விடுதலையான சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாகக் கூறினார். தேர்தல்க்குப் பிறகு, அதிமுகவை மீட்பதாகக் கூறி அதிமுக நிர்வாகிகளுடன் போனில் பேசிய ஆடியோக்களை வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார். சசிகலாவுடன் போனில் பேசியவர்களை அதிமுக தலைமை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த சூழ்நிலையில்தான், அதிமுகவில் அடுத்த 6 மாதங்களில் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாகிக்ள் கூட்டத்தில் அதிமுக இரட்டைத் தலைமை ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் உட்கட்சி தேர்தலை நடத்த தயாராக வேண்டும் என்று கூறினார்கள். “அதிமுக உட்கட்சி தேர்தல் அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிளை, தொழிற்சங்கம், நகரம், மாநகரம், மாவட்டம் அளவில் கட்சி பொறுப்பாளர்களுக்கு தேர்தல் அறிவிக்கப்படுவதால் இது அதிமுகவின் அடிமட்ட கட்டமைப்பை புதுப்பிப்பதாக இருக்கும். ” என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தனர்.

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, அதிமுக தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்ட விரைவில் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகக் கூறினார்.

நிலைமையை உணர்ந்த அதிமுகவின் இரட்டைத் தலைமை ஓபிஎஸ் - இபிஎஸ், 2019ம் ஆண்டு அதிமுகவின் கட்சி விதிகளை திருத்தினார்கள். அதில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்கள் அதிமுகவில் 5 ஆண்டுகள் எந்தவொரு இடைவெளியும் இல்லாமல் கட்சியின் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.

சசிகலா அதிமுகவை மீட்பேன் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவேன் என்று கூறினாலும் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படாது. அதிமுகவில் தற்போது இருக்கும் நிலைமை ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் தலைமை தொடரும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிகின்றனர். அதே நேரத்தில், அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான கோரிக்கை குரல்களும் அதிகரித்து வருகிறது. அப்படி, ஒற்றைத் தலைமை அதிமுகவின் பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி வந்தால் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மீண்டும் அதிகாரப் போட்டி ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல, இதற்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் பதவி தொண்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், திருத்தப்பட்ட கட்சி விதிகளின்படி உயர் மட்டக்குழுவான பொதுக் குழு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. தொழிற்சங்கங்கள், நகரம், மாவட்டங்கள் மற்றும் மாநில பிரிவுகளின் செயலாளர்கள் பொதுக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். “அதிமுகவில் மாவட்டங்களில் இந்த பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெறும். முன்னதாக, ஜெயலலிதா இருந்தபோது அவர் போயஸ் கார்டனில் இருந்து வெளியிடும் பட்டியல்களில் உள்ளவர்கள்தான் பொறுப்பாளர்களாக இருப்பார்கள். ஆனால், இந்த முறை மாவட்ட செயலாளர்கள் தேர்வு அப்படி இருக்காது என்று கூறுகின்றனர். அதிமுகவின் இரட்டை தலைமை ஓபிஎஸ் - இபிஎஸ் இருவருமே தங்கள் ஆதரவாளர்களை முடிந்தவரை மாவட்ட செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான திட்டங்களைத் தீட்டுவார்கள் என்று” என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அதிமுகவின் திருத்தப்பட்ட கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக் குழுவுக்கு அதிகபட்சம் 100 உறுப்பினர்களை பரிந்துரைக்கலாம் என்று தெரிவிகின்றனர்.

அதனால், அதிமுக உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டால் ஜெயலலிதா இருந்தபோது நடைபெற்ற உட்கட்சி தேர்தலைப் போல இல்லாமல் பல மாவட்டங்களில் இந்த முறை போட்டி இருக்கும் என்று அதிமுக வட்டாரங்கள் உறுதியாக கூறுகிறார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu Ops Eps Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment