‘ஆர்.கே.நகர் ஏரியா, மோதிப் பார்ப்போம் வாரியா’ என ஆட்டம் பாட்டத்துடன் கூடிய வீடியோ தீம் சாங்கை உருவாக்கி, ஆர்.கே.நகர் களத்தை கலக்குகிறது அதிமுக!
RK Nagar Anthem #Madhusudhanan4RKNagar #Vote4TwoLeaves pic.twitter.com/Bjsj9ccwHz
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) December 9, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் களை கட்டியிருக்கிறது. அதில் புதிய விசேஷம், அதிமுக.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு உருவாக்கியிருக்கும், ‘ஆர்.கே.நகர் அன்தெம்’! பொதுவாக பிரபல நடிகர்கள், பெரிய தலைவர்களுக்கு ‘தீம் சாங், அன்தெம்’ என்கிற பெயர்களில் புரமோஷனுக்காக பாடல்களை உருவாக்குவது ஏற்கனவே ‘டிரென்ட்’டாக இருக்கிறது. இந்தச் சூழலில் இடைத்தேர்தலுக்காக தமிழகத்தில் உருவான முதல் ‘தீம் சாங்’ இது என்கிறார்கள், அதிமுக.வின் ஐ.டி. பிரிவு நிர்வாகிகள்.
ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேட்பாளர் மதுசூதனனுக்காக பிரசாரம் செய்த டிசம்பர் 9-ம் தேதி இந்த வீடியோ பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். சென்னை மெரினாவில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நினைவிட முகப்புக் காட்சியுடன் இந்தப் பாடல் ஆரம்பமாகிறது.
‘புரட்சித் தலைவி வழி வந்த அண்ணன் வறாரு... அவங்க கனவ நிறைவேற்ற வறாரு, மண்ணின் மைந்தன் மதுசூதனன் வறாரு.. நகரு நகரு, அம்மா ஜெயித்த ஆர்.கே.நகரு... ஆர்.கே.நகரு ஏரியா, மோதிப் பார்ப்போம் வாரியா..’ என கானா பாடல் மெட்டில் மகளிர் அணியினரின் ஆட்டம் பாட்டத்தையும் கலந்து இந்த ‘தீம் சாங்’ பட்டையைக் கிளப்புகிறது. ‘ஆர்.கே.நகர் எங்க தொகுதி, கெளம்பு, கெளம்பு’ என எதிர்க்கட்சிகளை நக்கல் அடிக்கவும் தவறவில்லை.
ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் பிரசார நிகழ்ச்சிகளிலும் இந்த ‘தீம் சாங்’ ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாடலில், ‘மக்களால் நான், மக்களுக்காக நான்’ என்கிற ஜெயலலிதா குரலும், எம்.ஜி.ஆரின், ‘ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே’ என்கிற குரலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக தொண்டர்கள் மத்தியில் இந்தப் பாடல் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிமுக.வினர் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களிலும் இந்த ‘தீம் சாங்’கை வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.