சசிகலாவும், டிடிவி தினகரனும் விரைவில் எங்களுடன் இணைவார்கள் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்த நிலையில், பின்னர் மீண்டும் ஒன்றிணைந்தனர். ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணைப்பை தொடர்ந்து, சசிகலாவும், டிடிவி தினரன் அணியினர் ஓரம் கட்டப்பட்டனர். இதனால், முதலமைச்சரை மாற்ற வேண்டும் என டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு இல்லை என்றும், முதலமைச்சரை மாற்ற வேண்டும் என ஆளுநரை சந்தித்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கடிதம் அளித்தனர். இதனால், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், சசிகலாவும், டிடிவி தினகரனும் எங்களுடன் விரைவில் இணைவார்கள் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தம்பிதுரை டெல்லியில் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சசிகலா, டிடிவி தினகரன் விரைவில் எங்களுடன் இணைந்துவிடுவார்கள். எங்களுக்குள் தற்போது கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணை என்பது தேவையற்றது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, அவரை பார்த்தேனா இல்லையா என்பதை விசாரணை ஆணைத்திடம் தெரிவிப்பேன். ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அமைச்சர்களின் கருத்து குறித்து நான் பதிலளிக்க விரும்பவில்லை.
ஜெயலலிதா மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படவே விரும்புகின்றோம். திமுக தலைவர் மு கருணாநிதி உடல் நலத்டன் இருப்பதாக வரும் தகவல் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது என்று கூறிறார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, டிடிவி தினகரனுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தம்பிதுரை இவ்வாறு தெரிவித்துள்ளார்.