டிஜஜி ரூபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்... கர்நாடக முதல்வருக்கு புகார் அனுப்பிய அதிமுக அம்மா அணி

எனது கடமையை செய்ததற்காக, வரும் பிரச்சனைகளை சந்திக்க தயாராக இருக்கிறேன். சிசிகலா விவகாரத்தில் நான் சுயவிளம்பரம் தேடவில்லை என்று கூறினார்.

அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளா் சசிகலா குறித்து ஊடகங்களில் தொடர்ந்து பேட்டி அளித்து வரும் முன்னாள் டிஐஜி ரூபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு புகார் அனுப்பியுள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வருகிறார் அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலானர் சசிகலா. சிறையில் உள்ள சசிகலா ஏராளமான வசதிகளை அனுபவித்து வருவதாக ரூபா சமீபத்தில் புகார் தெரிவித்திருந்தார். சசிகலா தரப்பில் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்த அவர், சசிகலா சிறையில் சீருடை அணியாமல், சிறப்பு சமையலறை, எல்இடி உள்ளிட்ட ஏராளமான வசதிகளை அனுபவித்து வருகிறார் என்று புகார் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம், தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் டிஜிபி சத்திய‌நாராயண ராவ், மற்றும் புகார் தெரிவித்த ரூபா உள்ளிட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அதிமுக (அம்மா) கட்சியின் செய்தித் தொடர்பாளரும், கர்நாடக அதிமுக அம்மா அணியின் செயலாளருமான புகழேந்தி தனது வழக்கறிஞர் கிருஷ்ணப்பன் மூலமாக முதல்வர் சித்தராமையா, உயர்நிலை விசாரணைக் குழு அதிகாரி வினய்குமார் ஆகியோருக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சிறையில் முறைகேடு தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து வரும் ரூபா, போக்குவரத்து துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனாலும், காவல் துறை விதிமுறைகளுக்கு மீறும் வகையில், ஊடகங்களுக்கு ரூபா தொடர்ந்து பேட்டி அளிக்கிறார்.

ரூபா சுய விளம்பரம் தேடும் வகையில், சசிகலாவின் புகழுக்கு களங்கம் விளைவித்து வருகிறார். இந்த விவகாரம் குறித்து ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்நிலை விசாரணைக் குழு விசாரணையை தொடங்கிய நிலையிலும், ரூபா தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறார். எனவே, ரூபா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் டிஐஜி ரூபா கூறும்போது: சசிகலா மீது நான் தெரிவித்த புகார் உண்மை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஊடகங்களில் ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. டிஜிபி சத்தியநாராயண ராவ், ரூ.50 கோடி கேட்டு வழக்கு தொடர இருப்பதாக கூறியுள்ளார். தற்போது, அதிமுக அம்மா அணியின் சார்பில் புகார் அனுப்பப்பட்டுள்ளது. எனது கடமையை செய்ததற்காக, வரும் பிரச்சனைகளை சந்திக்க தயாராக இருக்கிறேன். இதில் சுயவிளம்பரம் ஏதுவும் இல்லை என்று கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close