பின்வரும் நாட்களில் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது: மக்களுக்கு நல்லது செய்ய யார் விரும்பினாலும் வரவேற்பேன். அந்த வகையில் சகோதரர் விஷால் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்.
நாஞ்சில் சம்பத் மீது வழக்கு
பேச்சு சுதந்திரத்தை முடக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அதற்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்ரதரராஜன் பெயரை பயன்படுத்திக் கொள்ளவதாக தெரிகிறது. மிகப்பெரிய பேச்சாளரான குமரி அனந்தனின் மகள் தான் தமிழிசை, அவருக்கு இதெல்லாம் புரியும் என நினைக்கிறேன். இதுபோன்ற நடவடிக்கை சமூதாயத்திற்கு நல்லதல்ல.
தொடர்ந்து அமைச்சர்களை பொறுப்பில் இருந்து நீக்குவது குறித்து?
தொடர்ச்சியாக நீக்குகிறேன் என்று கூறுவது தவறு. நான் முன்னதாகவே கட்சியில் சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொள்வேன் என்று கூறியிருந்தேன். அதற்கு அமைச்சர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில், புதிய நிர்வாகிகளை நியமிக்கிறேன். கட்சிக்காக செயல்படாதவர்களை நீக்கியிருக்கிறேன்.
விமர்சனங்கள்
பதவியில் இருந்து நீக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாமல், விமர்சித்து வருகின்றனர். அதுபோன்ற விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
தனியரசு, கருணாஸ், தமீமுன் அன்சாரி நேற்று உங்களுடன் சந்தித்துள்ளது குறித்து?
முன்னதாக பேரறிவாளன் பரோல் விவகாரம் குறித்து முதலமைச்சரிம் கூற வேண்டும் கேட்டுக் கொண்டார்கள். அதன்படி நானும், முதலமைச்சரிடம் இது தொடர்பாக தெரிவித்தேன். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சந்தித்தனர். மேலும், 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளவர்களை அண்ணா பிறந்தநாளில் விடுவிக்க வேண்டும் என்பதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் என்னிடம் கேட்டுக் கொண்டனர். வேறு எதுவும் பேசவில்லை.
ஆட்சி கவிழ வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறீர்களா?
ஆட்சி கவிழ்ப்பு குறித்து தெரிவிப்பதற்கு நான் ஜோசியர் அல்ல. கட்சிக்கே துரோகம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவிற்கே துரோகம் செய்த முதலமைச்சர், மக்களுக்கு எப்படி நன்றி உணர்வுடன் செயல்பட முடியம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் நாங்கள் அன்று ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தோம்.
அன்று 19 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர், தற்போது 21-ஆக அதிகரித்துள்ளது. இந்த வார இறுதிக்குள் 40 எம்.எல்.ஏ-க்கள் எங்களிடம் வருவார்கள். போகப்போக எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் என்று கூறினார்.