பொதுச்செயலாளர் சசிகலா தலைமையின்படி தான் கட்சி வழிநடத்தப்படுவதாக டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ தங்க.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தரப்பு எம்.எல்.ஏ தங்க.தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது: கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தது என்பது சாதரணமான சந்திப்பு தான்.
கேள்வி: ஓபிஎஸ் வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து?
தங்க.தமிழ்செல்வன் : ஓபிஎஸ் இருக்கும் போது ஊழலே இல்லாமல் இருந்ததா? பன்னீர் செல்வம் உடன் சென்றவர்கள் குதிரை பேரத்தின் அடிப்படையில் தான் சென்றார்களா? ஓ.பி.எஸ் சொல்வதில் எந்தவித தெளிவும் இல்லை. அவர்களுடன் சென்றவர்களுக்கும், எங்களுடன் வந்தவர்களுக்கு விசாரணை வேண்டுமானால் வையுங்கள். விசாரணை நடத்துவதால் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் 122 பேர் தற்போது ஒரே அணியில் தான் இருக்கிறோம். அதில் மாறுபட்ட கருத்து ஏதும் இல்லை.
கேள்வி: கட்சியின் தலைமை குறித்து?
தங்க.தமிழ்செல்வன் :கட்சியின் தலைமை என்பது பொதுச்செயலாளர் சசிகலா தான், துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். ஆட்சி என்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். இது தான் சிஸ்டம், இந்த சிஸ்டத்தின் படியே ஆட்சியும், கட்சியும் வழிநடத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் கட்சியும் ஆட்சியும் வழிநடத்தப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறாரே?
அமைச்சர் ஜெயக்குமார் தன்னிலையில் இருந்தாரா இல்லையா என்பது தெரியவில்லை. போதையுடன் பேசினாரா என்றும் சந்தேகமாக இருக்கிறது. முன்னதாக, இதே ஜெயக்குமார் தான், சசிகலா சொல்லித்தான் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று கூறியிருந்தார். இதை எம்.எல்.ஏ-க்கள் 122 பேரும் கூட நம்ப மாட்டார்கள். ஜெயகுமார் இவ்வாறு பேசுவது முட்டாள் தனமாது.
கேள்வி: அதிமுக, தேசிய ஜனநாக கூட்டயில் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து?
தங்க.தமிழ்செல்வன் : அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏன் இணைய வேண்டும். அதிமுக பெரிய கட்சி.
கேள்வி: மத்திய அமைச்சர் பதவியை பெறுவதற்காக, கூட்டணியில் இணைவதாக தகவல் வருகிறதே?
தமிழ்செல்வன்: அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அது குறித்து கட்சி தான் முடிவு செய்யும்.
கேள்வி:முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் கட்சித் தலைமை டிடிவி தினகரன் தான் என ஏற்பார்களா?
அதையெல்லாம் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று கூறினார்.