டிடிவி தினகரன் குறித்து ஜெயகுமார் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தால் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைதான டிடிவி தினகரன், சிறையில் இருந்து வெளிவந்தபோது மீண்டும் கட்சிப் பணியாற்றுவேன் என்று அறிவித்தார். மேலும், பிளவு பட்டுள்ள அதிமுக அணிகள் இணைய இரண்டு மாதம் காலக்கெடு விதித்திருந்தார். இந்தநிலையில், காலக்கெடு வரும் 4-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், 5-ம் தேதி முதல் அதிமுக தலைமை கழகத்திற்கு வந்து கட்சிப் பணியாற்ற உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே ஆட்சியும், கட்சியும் வழிநடத்தப்படுவதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய சசிகலா சிறையில் உள்ளதால், துணைப்பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்டாயமாக கட்சிப் பணியாற்றுவேன் என் டிடிவி தினகரன் கூறி வருகிறார்.
இந்த நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளதாவது: துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நினைத்தால், அமைச்சர் ஜெயக்குமார் அவரது பதவியை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கிறேன்.
ஆட்சிக்கு தலைமை தாங்குபவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கே பொதுச்செயலாளர் சசிகலா தான். இந்த அடிப்படை கூட தெரியாமல், படிச்சு என்ன பிரயோஜனம். ஜெயகுமார் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் அவரது பதவியை இழப்பார் என்பது உறுதி.
அதிமுக தலைமைக் கழகமானது எங்கள் கட்சியின் அலுவலகம். எங்கள் கட்சி அலுவகலத்திற்கு நாங்கள் செல்ல யாருடைய அனுமதியும் தேவையில்லை. வரும் 5-ம் தேதி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சியின் வளர்ச்சி குறித்து ஊடகங்களுக்கு தகவல் தெரிவிப்பார் என்று கூறினார்.
டிடிவி தரப்பினர் இவ்வாறு கூறியுள்ள நிலையில், குறித்து அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்டபோது: வெற்றிவேல் கருத்து குறித்து நான் பதில் சொல்ல தயாராக இல்லை. அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிமுக-விற்கு வந்தவர். இந்த கட்சியைப் பற்றி ஒன்றும் அவருக்கு தெரியாது. நாங்களெல்லாம் 8 முறை சிறைக்கு சென்றுள்ளோம்.
ஜெயலலிதாவின் விசுவாசியாக தொடர்ந்து இருந்து வந்திருக்கிறோம். எனவே, எங்களுக்கு கட்சியை கட்டிக் காக்கின்ற உரிமை இருக்கின்றது. அனைத்து நடவடிக்கைகளுக்கும் உரிமை பெற்றவர்கள் நாங்கள் தான்.காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த அவர், அதிமுக-வில் காங்கிரஸ் கலாசாரத்தை புகுத்த வேண்டும் என்று நினைத்தால் அது ஒரு போதும் நடக்காத காரியம்.
டிடிவி தினகரன் கெடு விதித்து, தலைமை அலுவகத்தை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார்களே?
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் கூற முடியும். யார் குறித்தும் குறிப்பிட்டு பேசுவதில் எனக்கு பேசுவதில் உடன்பாடு இல்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நல்ல முறையில் நடந்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்ததே பொதுச்செயலாளர் சசிகலா என்று கூறுகிறார்களே?
அனைத்து எம்.எல்.ஏ-க்களும் சேர்ந்து தான் முதலமைச்சரை தேர்வு செய்தோமே தவிர, வேறு யாரும் முதலமைச்சரை தேர்வு செய்யவில்லை என்று கூறினார்.