அதிமுக-வில் ஜெயலலிதாவிற்கு பின்னர் சசிகலா தான் என்றும், சசிகலா தியாகம் செய்தவர் என எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியதாக வெளிவந்துள்ள வாட்ஸ்அப் ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் விசாரணை, சசிகலா மற்றும் டிடிவி தினகரன் குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஒதுக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தான் அதிமுக இரண்டாக பிளவுபட்டது. இந்த நிலையில், ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை என்றும், டிடிவி தினகரனுக்கு எதிராக தீர்மானம் எடப்பாடி பழனிசாமி அணி, இரு அணிகள் ஒன்றிணைய நடவடிக்கை மேற்கொண்டது. இதன் காரணமாக ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணி ஒன்றிணைந்தன.
அப்போது, பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம் தெரிவித்திருந்தார். பொதுச்செயலாளரை நீக்க வேண்டுமானால் அதிமுக-வின் பொதுக்குழு கூட வேண்டும். எனவே பொதுக்ழுழு கூடுபோது அதிமுக பொதுச் செயலாளரரை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் வைத்திலிங்கம் தெரிவித்திருந்தார். இதனால், சசிகலா நீக்கப்படுவார் என பொதுவான கருத்து நிலவி வருகிறது. ஆனால், டிடிவி தினகரன் குறித்து கருத்து தெரிவிக்கும், அமைச்சர்கள் சசிகலா குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து வருகிறன்றனர்.
இதனிடையே, முதலமைச்சரை மாற்ற வேண்டும் என டிடிவி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளர் ஒருவர் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் பேசுவது போன்ற வாட்ஸ்அப் ஆடியோ வெளியாகியுள்ளது. இருவரும் பேசும்போது,
சசிகலாவிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வது நியாயம் தானா?
முதலமைச்சருடன் தற்போது இருக்கும் நிலையில், அவர்கள் எல்லாம் பேசும்போது நானும் இரண்டு வார்த்தை பேச வேண்டும் என்பதற்காக தான் அவ்வாறு பேசியிருப்பேன். நான் பேசியதை கூர்ந்து கவனித்துப்பார்த்தால், சசிகலாவை எதிர்த்து நான் பேசியிருக்க மாட்டேன் என்பது உங்களுக்கே விளங்கும். சசிகலாவின் படத்தை வைத்து வாக்கு கேட்காதவர்கள் தற்போது சசிகலாவை தூக்கி வைத்துக் கொண்டு ஆடக்கூடாது.
சசிகலா மீது எனக்கு இன்னமும் மரியாதை அதிகமாக தான் இருக்கிறது. அதிமுக-வை பொறுத்தவரையில் ஜெயலலிதாவிற்கு அடுத்ததாக சசிகலாதான். ஆனால், அதனை பயன்படுத்திக் கொண்டு கட்சிக்குள் வருபவர்களுக்கே நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.
டிடிவி தினகரன் பேரவையில் இருக்கும் எனது கருத்துப்படி, டிடிவி தினகரனுக்கு மக்களின் மத்தியில் ஒரு எழுச்சி இருக்கிறதாக பார்க்கப்பட்டு வருகிறதே?
தற்போதைய நிலையில், கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும். தேர்தல் ஆணைத்தால் முடக்கிவைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னம் மீட்கப்பட வேண்டும். அப்படி ஆட்சியை காப்பாற்ற வேண்டுமானால், அனைவரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். ஆனால், ஆட்சியை கவிழ்க்கும் வகையில் ஆளுநரை சந்தித்து கடிதம் அளிப்பது போன்ற நடவடிக்கைகள் சரிதானா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சசிகலா நீக்குவதாக கூறிவருகிறார்களே?
அப்படி எதுவும் இல்லவே இல்லை. நீங்களாக அவ்வாறு புரிந்து கொண்டிருப்பீர்கள். சசிகலாவை நீக்குவதாக எங்கேயாவது கூறியிருக்கிறோமா?
வைத்தியலிங்கம் கூறியிருக்கிறாரே!
அவற்றையெல்லாம் கண்டுகொள்ளதேவையில்லை. பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை எளிதாக நீக்கி விட முடியுமா என்ன? ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகாலம் சசிகலா இருந்துள்ளார். அப்படி பார்க்கையில், சசிகலா உண்மையிலேயே தியாகம் செய்தவர் என்று கூறினார்.
இதுபோன்ற ஆடியோக்களை வைத்து பார்க்கும் போது தமிழக அரசியலில், அடுத்த நாடகம் அரங்கேறுகிறது என்பதாகவே தெரிகிறது.