/tamil-ie/media/media_files/uploads/2021/06/ops-admk-eps.jpg)
தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 21ம் தேதி அளுநர் உரையுடன் தொடங்குகிறது. ஆனால், அதிமுகவில் இன்னும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் நியமனம் செய்யப்படவில்லை. சட்டமன்ற கொறடாவும் நியமனம் செய்யப்படவில்லை. இந்த சூழ்நிலையில்தான், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை (ஜூன் 13) தொடங்குகிறது.
இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவினாலும் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. 2017ம் ஆண்டில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைந்ததில் இருந்தே இருவருக்கும் இடையேயான பணிப்போர் தொடங்கிவிட்டது . இந்த பணிப்போர் சில நேரங்களில் வெளியே தெரியும்படியாகவும் சில சமயங்களில் புகைச்சலாகவும் இருந்து வருகிறது. நடந்து முடிந்த தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் ஓ.பி.எஸ் அளித்த கடும் போட்டியையும் தாண்டி தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தேர்ந்தெடுக்கப்படவில்லை. கொறடாவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதனால், ஜூன் 14ம் தேதி நடைபெறுகிற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டப் பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி மற்றும் கொறடா பதவி யாருக்கு என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஜூன் 14ம் தேதி ஆதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஓ.பி.எஸ் கட்சியில் ஒருங்கிணைப்பாளராக தனக்கு தனி அதிகாரம் வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிவிக்கின்றனர். ஓ.பி.எஸ் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை மறுத்தால் அந்த பதவி யாருக்கு வழங்கப்படும் என்று விசாரித்தபோது, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமிக்கு வழங்க வாய்ப்புள்ளது என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால், கே.பி.முனுசாமி அதிமுகவில் ஓ.பி.எஸ்-க்கும் ஈ.பி.எஸ்-க்கும் இடையே பாலமாகவும் செயல்பட்டு வருகிறார் என்று தெரிவிக்கின்றனர்.
ஓ.பி.எஸ் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஏற்காவிட்டால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் கொறடா பதவி தனது சாய்ஸாகவே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலு, ஓ.பி.எஸ் தனது ஆதரவாளரான முன்னால் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை கொறடாவாக நியமிக்க விரும்புவதாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால், ஈ.பி.எஸ் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஓ.பி.எஸ்-க்கு வழங்கிவிட்டு கொறடா பதவி எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்படுவது என்றாலே அது ஈ.பி.எஸ் சாய்தான். அதனால், கொறடா பதவி தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அளிக்க வேண்டும் என்பதில் ஈ.பி.எஸ் விரும்புவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அந்த தென் மாவட்ட அதிமுக எம்.எல்.ஏ யார் என்றால், திண்டுக்கல் சீனிவாசன் என்கின்றனர்.
ஆனால், இதற்கெல்லாம் ஓ.பி.எஸ்-ஸின் முடிவு என்னவாக இருக்கும் என்றால் பெரும்பாலும் ஓ.பி.எஸ் அதிமுகவில் தனது பிடியை விட்டுக்கொடுக்காமல் அதே நேரத்தில் கட்சியில் உடைப்பை ஏற்படுத்தாமல் செயல்படுவார். அது சமரசமாகவும் இருக்கலாம். அல்லது தொடர்ச்சியான ஒரு அழுத்தமாகவும் இருக்கலாம் என்கிறார்கள் அதிமுக வட்டாரங்கள். அதிமுகவில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் கொறடா பதவி பற்றி பல்வேறு விவாதங்கள் நடந்தாலும் நாளை (ஜூன் 14) நடைபெறும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு தெரிந்துவிடும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.