இரட்டை இலை சின்னத்தை மீட்கும் முயற்சியாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் சார்பில் அமைச்சர்கள் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக ஒன்றுபட்ட அதிமுக-வாக தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள அவர்களுக்கு, தேர்தல் ஆணையம் நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டது. முதலமைச்சர் பதவி வகித்த ஓ பன்னீர் செல்வம், சசிகலா முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே, ஜெயலலிதாவின் சமாதி அருகே தியானம் செய்த ஓபிஎஸ், திடீரென பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதில்,முதலமைச்சர் பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்யவில்லை என்றும், ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டேன் என்றும் புகார் தெரிவித்தார்.
கட்சியும், ஆட்சியும் ஒரே தலைமையில் இருக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் வந்துவிட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், சிறைவாசம் சென்றார் சசிகலா.
ஜெயலலிதா மறைவினால் காலியான ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரின. இதனால், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. அப்போது, இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக ஓபிஎஸ் தரப்பிலும், சசிகலா தரப்பிலும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
தற்போது ஓ பன்னீர் செல்வம் அணி, எடப்பாடி பழினிசாமி அணியுடன் இணைந்துள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தை மீட்கும் நடவடிக்கையில் அவர்கள் ஒன்றிணைந்து ஈடுபட்டுள்ளனர். இரட்டை இலை சின்னத்தை பெறும் முயற்சியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி.வி சண்முகம் ஆகியோரும், ஓபிஎஸ் தரப்பு சார்பில் மைத்ரேயன் எம்.பி, முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் ஆகியோர் நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
இந்த சந்திப்பின் போது, ஓபிஎஸ் தரப்பில் இருந்து, முன்னதாக அணிகள் பிளவின்போது தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாண பத்திரங்களை வாபஸ் பெற திட்டமிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து, இரு அணிகளும் ஒன்றிணைந்துவிட்டன என்பதால் “அதிமுக அம்மா” அணி, “அதிமுக புரட்சித் தலைவி அம்மா” அணி என்பதை நீக்கிவிட்டு அதிமுக என்பதை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என தேர்தல் ஆணைத்திடம் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக, எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாண பத்திரங்களில் பொதுச்செயலாளர் சசிகலா என்றே குறிப்பிடப்பட்டது கவனிக்கத்தக்கது.
மேலும், விரைவில் பொதுக்குழுவை கூட்டி புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்போம் என்றும், அதுவரை பொதுச்செயலாளர் இல்லாத நிலையில் கட்சியின் விதிகள்படி அவைத்ததலைவைர் பொருளாளர், தலைமை நிலைய செயலாளர் ஆகியோர் கட்சியை வழிநடத்துவர் என்றும் தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தால் மட்டுமே அதிமுக பெயரைப் பயன்படுத்தி பொதுக்குழுவை கூட்ட முடியும் என்பதால், இந்த சந்திப்பு என்பது முக்கித்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனாலும், இன்று காலையில் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.