மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் தமிழக அமைச்சர்கள், அதிமுக தலைவர்கள் சந்தித்துப் பேசினர். இவை அரசியல் ரீதியான சந்திப்பா அல்லது துறை ரீதியான சந்திப்பா என கேள்வி எழுந்ததுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டது. முதலமைச்சர் பதவி வகித்த ஓ பன்னீர் செல்வம், சசிகலா முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே, ஜெயலலிதாவின் சமாதி அருகே தியானம் செய்த ஓபிஎஸ், திடீரென பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதில்,முதலமைச்சர் பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்யவில்லை என்றும், ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டேன் என்றும் தெரிவித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/ops-3.jpg)
கட்சியும், ஆட்சியும் ஒரே தலைமையில் இருக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் வந்துவிட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், சிறைவாசம் சென்றார் சசிகலா.
ஜெயலலிதா மறைவினால் காலியான ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரின. இதனால், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. அப்போது, இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக ஓபிஎஸ் தரப்பிலும், சசிகலா தரப்பிலும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
தற்போது ஓ பன்னீர் செல்வம் அணி, எடப்பாடி பழினிசாமி அணியுடன் இணைந்துள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தை மீட்கும் நடவடிக்கையில் அவர்கள் ஒன்றிணைந்து ஈடுபட்டுள்ளனர். அதன்படி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மக்களவை துணை சபாநாயகர் மு தம்பித்துரை, அமைச்சர்கள் பி தங்கமணி, டி ஜெயக்குமார், சி.வி சண்முகம் ஆகியோரும் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன், ஆகியோரும் நேற்று முன்தினம் டெல்லிக்கு சென்றனர்.
நேற்று காலை தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே ஜோதியை சந்தித்து, பிரமாண பத்திரங்களை திரும்பப்பெற திட்டமிட்டிருந்தனர். தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே வெளிநாடு சென்றிருந்ததால், அவருக்கு அடுத்த பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், மூத்த வழக்கறிஞர் ஒருவருடன் மு. தம்பித்துரை, அமைச்சர்கள் பி தங்கமணி, டி ஜெயக்குமார், சி.வி சண்முகம், மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதில், முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெறும் சமயத்தில், இரட்டை இலை சின்னம் சசிகலா பக்கம் செல்ல வாய்ப்பு இருப்பதாக மூத்த வழக்கறிஞர் கூறிதால், வாபஸ் பெறும் முடிவு கைவிடப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், செவ்வாய் கிழமை காலை, மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, மக்களவைத் துணைத் தலைவர் மு தம்பித்துரை தலைமையில், தமிழக அமைச்சர்கள் மூவர், மைத்ரேயன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க வந்திருப்பதாக கூறுவது தவறு. மத்திய அமைச்சர்களை மாநில அமைச்சர்கள் சந்தித்து, துறை ரீதியாக சந்தித்து பேசுவது என்பது வழக்கமான நிகழ்வு தான். அதன்படியே இந்த சந்திப்பு நடந்தது. நிர்மலா சீதாராமனை சந்தித்ததில், வேறு ஏதும் உள்நோக்கம் கிடையாது என்று கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/Arun-Jaitley.jpg)
பின்னர் மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லியை, மு தம்பித்துரை தலைமையில் தமிழக அமைச்சர்கள் மூவரும் சந்தித்துப் பேசினர். இதன் பின்னர் தம்பித்துரை செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து பல்வேறு துறைகளில் இருந்து ரூ.17000 கோடி நிதி வர வேண்டியுள்ளது. இது தொடர்பாகவே மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தோம் என்று கூறினார். முன்னதாக வர்த்தகத்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது என்பது துறை ரீதியிலானதே தவிர, அரசில் ரீதியானது அல்ல என்று கூறினார்.
ஆனால், மைத்ரேயன் செய்தியாளர்களிடம் கூறும்போது: தமிழக அரசியல் சூல்நிலைகள், தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ள பிரமாண பத்திரம் உள்ளிட்டவை குறித்து சட்டவல்லுனர்கள், அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்களுடன் கலந்து பேசுவதற்காகவே டெல்லி வந்திருக்கிறோம். மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை என்றே கருதுவதாக கூறினார்.
இவ்வாறு வெவ்வெறு கருத்துகளை தெரிவித்துள்ளதால், உண்மையில் இவர்கள் எதற்காக டெல்லி சென்றனர் என்பது குழப்பமாகவே உள்ளது.