இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் டிடிவி தினகரன் அணியின் தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி- ஓ பன்னீர் செல்வம் அணி ஒன்றாக இணைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை மீட்கும் நடவடிக்கையில், ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். இரட்டை இலை சின்னத்தை பெறும் முயற்சியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி.வி சண்முகம் ஆகியோரும், ஓபிஎஸ் தரப்பு சார்பில் மைத்ரேயன் எம்.பி, முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் ஆகியோர் நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். இன்று காலையில் தேர்தல் ஆணையரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகி புகழேந்தி, முன்னாள் எம்.பி அன்பழகன் ஆகியோர் தேர்தல் ஆணைத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர். இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சிப் பெயர் விவகாரத்தில் தங்களை கேட்காமல் முடிவெடுக்கக்கூடாது என்று அவர்கள் மனு அளித்துள்ளனர். எனவே, இரட்டை இலை சின்னத்தை மீட்பத்தில் ஒன்றிணைந்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.