கட்சி தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அனைத்து அதிகாரங்களையும் எனக்கு சசிகலா கொடுத்துள்ளார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது: பணம் பாதாளம் வரை பாயும் என்ற விஷயத்திற்கு பயந்து கொண்டோ அல்லது வேறு எந்த காரணத்திற்கோ பயந்து எம்.எல்.ஏ-க்கள் ஹோட்டலில் இருக்கவில்லை. எப்படி காவிரிக்காக விவசாயிகள் போராடுகிறார்களோ அதோபோல, அதிமுக-விற்காக நாங்கள் போராடுகிறோம். 122 பேரும் எங்களுக்கு ஆதரவானவர்கள் தான். அதில் ஒரு சிலர் தங்களது சுய லாபத்திற்காகவும் பதவி ஆசைக்காகவும் செயல்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
பொதுச்செயலாளருக்கு இருக்கும் அனைத்து அதிகாரங்களும் துணைப் பொதுச்செயலாளருக்கு உள்ளது. கடந்த முறை பொதுச்செயலாளரை நான் சந்தித்தபோது கூட, கட்சியின் நலன் கருதி எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று என்னிடம் கூறினார். ஜெயலலிதா இருக்கும் போதில் இருந்து 20 ஆண்டுகாலாம் அரசியல் அனுபவம் உனக்கு இருக்கிறது. எனவே, அனைத்து முடிவுகளுக்கும் என்னிடம் கேட்க வேண்டாம். தொண்டர்களின் விருப்பப்படி கட்சியின் நலன்கருதி நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.
எச்.ராஜா டிடிவி திகனரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும், குட்கா விவகாரத்தில் 20 திமுக எம்.எல்.ஏ-க்களையும் சஸ்பெண்ட் செய்தால், எடப்பாடி தான் வாக்கெடுப்பில் வெற்றி பெறுவார் என்று கூறியிருக்கிறாரே?
அவர் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தாலும் அவர் வரவேற்பார்பார். அவரது கட்சியை வளர்க்க வேண்டும் என எண்ணிய குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்க முற்படுகிறார். அவருடைய எண்ணம் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.
டிடிவி தினகரன்- மு.க ஸ்டாலின் கூட்டணியில் ஆட்சி அமையும் என சுப்ரமணியசாமி கூறியது குறித்து?
சுப்ரமணியசாமி நான் மதிக்கக்கூடிய தலைவர். அவருக்கு எது சரியென்று படுகிறதோ அதனை செய்வார். தமிழகத்தின் நலனிலே அவர் ஈடுபாடு கொண்டதால், அவ்வாறு கூறியிருக்கலாம். அவரின் கருத்துக்க நான் எந்த பதிலும் கூறவிரும்பவில்லை.
ஆட்சியை கலைக்க விருப்பமா?
எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்னர் ஜானகியம்மாள் நினைத்தும் கூட ஆட்சியை காப்பாற்ற முடியாமல் போனது. ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், சசிகலா முயற்சியால் மீண்டும் ஆட்சி அமைக்கப்பட்டது. முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர் செல்வத்தின் எதிரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததால், அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என தற்போதைய முதலமைச்சர் உள்பட அனைவரும் சசிகலாவிடம் கோரிக்கை வைத்தனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க முடியாமல் போனது. அன்றைக்கு அவர் நினைத்திருந்தால், என்னையோ அல்லது எங்கள் குடும்பத்தை சார்ந்தவரையோ முதலமைச்சராக கைகாட்டி இருக்க முடியும். நாங்கள் பதவிக்காக அலைபவர்கள் அல்ல.
அந்தவகையில் ஆட்சியை கலைக்கும் நோக்கம் எங்களுக்கு நிச்சயம் கிடையாது. அதேநேரம் பொதுச்செயலாளரை நீக்கி விடுவோம் என்று கூறும்போது, கட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் ஒன்று கூடியிருக்கிறோம். இந்த இக்கட்டான நிலையை நாங்கள் உருவாக்கவில்லை.
பதவிக்காக தர்மயுத்தம் என்று யாசகம் செய்தவருடன் தற்போது இணைந்துள்ளனர். தற்பேது நபெறுவது தியாகத்திற்கும்-துரோகத்திற்கான யுத்தம் இதில் சசிகலாவின் தியாகம் வெற்றி பெறும்.
அணி மீண்டும் இணையுமா?
அவர்கள் எங்களை அழிப்பதாக நினைத்துக் கொண்டு, கட்சியை அழிக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் அதிமுக-வின் தொண்டர்கள், யாரிடமும் சென்று சமரசம் செய்துகொண்டு எதையும் பெற வேண்டிய அவசியல் இல்லை. கட்சியின் பொதுச்செயலாளரையும், துணைப் பொதுச்செயலாளரையும் நீக்கிவிட்டு எப்படி கட்சியை நடப்போகிறீர்கள் என்பது தான் கேள்வியும், கோரிக்கைமாக இருக்கிறது. அமைச்சர் பதவி கேட்டு எம்.எல்.ஏ-க்கள் இங்கு வரவில்லை. அனைத்தும் கட்சியின் நலனுக்காக தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.