பதவிக்காகவே ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்துள்ளன என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்.
பிளவுபட்ட அதிகமுக அணிகளான ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்த நிலையில், டிடிவி தினகரன் தரப்பு அணியினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்கள் ஆதரவு இல்லை என் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்துள்ளனர். டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கொறடா பரிந்துரையின் படி, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில், நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் நேற்று ரிசார்ட்டுக்கு புறப்பட்டுச சென்றனர். அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது: பத்து எம்.எல்.ஏ-க்களை மட்டுமே வைத்திருந்த ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீது ஊழல் நிறைந்தது என குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். ஆனால், தற்போது ஓ பன்னீர் செல்வத்திற்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது சசிகலா மீதும், டிடிவி தினகரன் மீதும் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
பொதுச்செயலாளர் என்ற முறையில் பொதுக்குழுவை கூட்ட சசிகலாவிற்கு அதிகாரம் உள்ளது. அதேபோல, கட்சியில் இருந்து நீக்குவது, சேர்பது உள்ளிட்ட அதிகாரங்கள் சசிகலாவிற்கு உள்ளது. ஜெயலலிதாவின் வழியில் கட்சி நடத்தப்பட்டு வருகிறது.
எம்.எல்.ஏ-க்கள் எங்களுக்கு ஆதரவாக வந்து கொண்டு இருக்கின்றனர். எனவே, வெற்றி எங்கள் பக்கம் தான். வெற்றியை நோக்கி எங்களது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-க்கள் எத்தனை நாட்கள் தங்குவார்கள் என்பது, டிடிவி தினகரனின் முடிவு தான். அவரது முடிவின்படியே செயல்பட்டு வருகிறோம். பொதுக்குழுவை கூட்டுவது குறித்து சசிகலாவும், டிடிவி தினகரனும் தான் முடிவு செய்வார்கள்.
ஆளுநர் அழைக்காவிட்டால், குடியரசுத் தலைவரை சந்திப்போம் என்று தங்க.தமிழ்செல்வன் கூறியது அவரது கருத்துதான். குடியரசுத் தலைவரை சந்திப்பது குறித்து டிடிவி தினகரன் தான் முடிவு செய்வார்.
பொதுக்குழுவில் தான் சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். எனவே, பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்குதான் உள்ளது. ஆனால், பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் ஒ பன்னீர் செல்வம். தற்போது ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில், அவரை பொருளாளர் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் நீக்கப்பட்டதை மறந்துவிட்டு, தங்கள் வசதிக்கு ஏற்ப பேசி வருகின்றனர் .
ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்பு என்பது தொண்டர்கள் இணைப்பு அல்ல. பதவிக்காகவே அந்த அணிகள் இணைந்துள்ளன என்று கூறினார்.