/tamil-ie/media/media_files/uploads/2022/01/Sindhamani-with-her-bull-Photo-credit-Karthik-Selvam-1-horz.jpg)
தன்னுடைய காளை மாட்டுடன் நிற்கும் சிந்தாமணி (இடது), அவனியாபுரம் ஜல்லிக்கட்டு களம் 2022 (வலது) - புகைப்படங்கள் கார்த்திக் செல்வம்
Alanganallur Jallikattu : "திருநங்கை சிந்தாமணி அக்கா காளை வருது பார்ர்ரு” என்று ஸ்பீக்கரில் செய்தி வரும் போதே காளையை அடக்க காத்திருக்கும் காளையர்கள் ஆர்ப்பரிக்க துவங்குகின்றனர். விசில், கைத்தட்டு, ஆரவாரத்திற்கு மத்தியில், கடந்த 7 ஆண்டுகளாக சிந்தாமணியின் அக்னி கருப்பு பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு வாகை சூடியுள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 14, 15 மற்றும் 17 தேதிகளில் முறையே அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடிவு செய்தது தமிழக அரசு. 16ம் தேதி நடைபெற இருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஞாயிறு முழு ஊரடங்கினால் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. பல்வேறு கற்பிதங்களை பொய்யாக்கி களத்தில் நின்று வெற்றி வாகை சூடும் திருநங்கை சிந்தாமணியிடம் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு அனுபவம் குறித்தும், ஜல்லிக்கட்டால் அவர் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் கேட்டு தெரிந்து கொண்டது தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/30cd5f43-17db-41bb-bc13-6543846d3080.jpg)
”என்னுடைய 20-களின் ஆரம்பத்திலேயே, எங்க வீட்டுல நான் ஒரு திருநங்கைன்னு சொன்னேன். என்னுடைய பாலியல் தேர்வு குறித்த புரிதல் எங்க வீட்டுல இல்ல. அதனால் வீட்ட விட்டு வெளியேற்றப்பட்டேன். மதுரைல சில அக்காங்க கூட சேர்ந்து ஆரம்பத்துல பிச்சை கூட எடுத்தேன். எங்கள பாக்குற மனுசங்க “இவ்வளவு பெரிய உடம்ப வச்சுட்டு பிச்சை எடுக்க அசிங்கமா இல்லையான்னு” எல்லாம் கேள்வி கேப்பாங்க… ரொம்ப அவமானமா இருந்தது” என்று தன்னுடைய ஆரம்ப கால வாழ்வைப் பற்றி மனம் திறக்கிறார் அலங்காநல்லூர் அருகே அமைந்திருக்கும் கல்லணை கிராமத்தை சேர்ந்த சிந்தாமணி.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Sindhamani-with-her-bull-Photo-credit-Karthik-Selvam-3.jpg)
30 வயதான சிந்தாமணி சிறு வயதில் இருந்தே ஜல்லிக்கட்டு காளை ஒருவருக்கு பெற்று தரும் பெருமைகளை கண்டே வளர்ந்தவர் என்பதால், ஜல்லிக்கட்டு காளை வளர்க்க முடிவு செய்தார். “காளை வளர்க்க முடிவு செஞ்ச போது, காசுக்கு என்ன செய்றதுன்னு யோசிச்சேன். பிச்சை எடுக்கக் கூடாதுன்னு தீர்க்கமா முடிவு எடுத்தேன். பிறகு மூனு வருசம் சித்தாள் வேலை பார்த்து என்னோட முதல் பசுவை வாங்கினேன். அப்பறமா களையெடுக்க, நாத்து நட, பால் வித்து அடுத்தடுத்து ஜல்லிக்கட்டுக்கு காளை மாடுகள வாங்குனேன்” என்றார் சிந்தாமணி.
தற்போது ராமு என்ற பசுவையும், அக்னி கருப்பு, பாண்டி முனி மற்றும் நொண்டி சாமி என்ற மூன்று ஜல்லிக்கட்டு காளைகளையும் வளர்த்து வருகிறார் சிந்தாமணி. இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 9 வயது அக்னி கருப்பும், 4 வயது பாண்டி முனியும் களம் இறங்குகிறது.
“ரேக்ளா பந்தயத்துக்கு காளை வளக்குறது ஒரு கலைங்க” – கொங்கு மண்ணும் ரேக்ளா பந்தயமும்
“ஜல்லிக்கட்டு காளைய வளர்த்து 7 வருசத்துக்கு முன்னாடி, முதன்முறையா பாலமேடு வாடிவாசல்ல நிக்கும் போது, என்னைய கேலி செய்யாதவங்க யாரும் இல்லை.. அடிக்க வந்தாங்க… துன்புறுத்தல் இருந்தது… நீ எதுக்கு இங்கலாம் வர்றன்னு கேள்வி எல்லாம் கேட்டாங்க… ஒரு பக்கம் அழுகையா வந்தது… ஆனாலும் மாட்ட இறக்கினேன்… என்னோட அக்னி கருப்பு யாருகிட்டையும் அணையாம வெளியேறின போது, எனக்கு அத்தனை சந்தோஷம்… இவங்க தர்ற தங்கம், பணம், பரிசு எல்லாம் முக்கியம் இல்லங்க… எங்க சமூகத்தை சேர்ந்தவங்க தலை நிமிந்து வாழ தேவையானது மரியாதை… அது தான் எனக்கும் தேவைப்பட்டது… ஜல்லிக்கட்டு போட்டி எனக்கு அந்த மரியாதையையும் அங்கீகாரத்தையும் கொடுத்தது”.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/avaniyapuram-jallikattu.jpg)
”இந்த வாழ்க்கை ஒன்னும் அத்தனை எளிமையா இல்ல… தினமும் பானி பூரி கடைக்கு 200 ரூபா சம்பளத்துக்கு வேலைக்கு போறேன்… வர்ற காச வச்சு நானும் சாப்பிட்டு என்னுடைய மாடுங்களுக்கும் தீவனம் வாங்கி போடுறேன். என் உலகமே இந்த மாடுங்க தான்… சமயத்துல நான் கூட பட்டினி கிடந்துக்குவேன் ஆனா என்னுடைய பிள்ளைங்க மாதிரி இருக்கும் அதுங்களுக்கு ஒரு குறையும் இல்லாம வளர்த்துருக்கேன். ஒரே தெருவுல தான் நானும் எங்க குடும்பமும் வசிக்கிறோம். பேச்சு வார்த்தை ஏதும் பெருசா இல்ல… ஆனா, இப்போ எனக்கு ஏதாவது தேவைன்னா ஊர்க்காரங்க உதவி செய்றாங்க” என்று போனில் மேற்கொண்டு பேசினார் சிந்தாமணி.
காளைகளுக்கு காலையில் நடைபயிற்சி. சிறிது நேரம் ஓய்வு அளித்த பின், மண் குத்தும் பயிற்சி, மீண்டும் சிறிது இடைவெளிக்கு பிறகு நீச்சல் பயிற்சி வழங்கப்படும். எப்போதும் உளுந்தங்குருணை, கோதுமை தவிடு மற்றும் துவரந்தூசி ஆகியவற்றை உணவாக காளைகளுக்கு கொடுக்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆரம்பமாவதற்கு 3 மாதங்களுக்கு முன்பில் இருந்து பருத்திக்கொட்டை, தேங்காய் மற்றும் பச்சரிசி ஆகிய உணவுகள் கூடுதலாக காளைகளுக்கு வழங்கப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Sindhamani-with-her-bull-Photo-credit-Karthik-Selvam-1.jpg)
ஊரடங்கு காலத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பற்றி பேசிய போது, ”கொரோனா தொற்று, ஊரடங்குன்னு ரெண்டு வருசமா ஜல்லிக்கட்டு களையே இல்லமா இருக்குது… 4 பேரு மாட்ட பிடிச்சுட்டு வாடிவாசல் வந்து நின்னா ரெண்டு பேரு விசில் அடிச்சு எங்க பேர அங்க பக்கத்துல இருக்கற பொதுமக்கள் மற்றும் காளையர்கள் கிட்ட சொல்ல, அப்படியே ஆரவாரம் தீயாய் பத்திக்கும். அவங்களோட விசிலும், கைதட்டலும், ஆரவாரமும் தான் எங்களுக்கு ஊக்கமே… அந்த ஊக்கம் இந்த இரண்டு வருசமாவே இல்லாம போய்ருச்சுன்றது கொஞ்சம் மன வருத்தம் தான்” என்று கூறினார் அவர்.
உங்களை தவிர வேறு திருநங்கைகள் யாராவது ஜல்லிக்கட்டு காளை வளர்க்கின்றார்களா என்று தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் கேட்ட போது, ”எல்லாத்துக்கும் பயம் தான் காரணம்.. நான் பாலமேடுல நிக்கும் போது கேக்காத வசவுகள் இல்ல… ஏற்கனவே திருச்சில விஜின்னு ஒரு திருநங்கை அக்கா எனக்கு முன்னாடியே ஜல்லிக்கட்டு காளை வளத்திருக்காங்க.. இந்த ஜனங்களோடு வசவுக்கு பயந்துட்டு போட்டிக்கெல்லாம் வர்றது இல்ல. ஆனா என்னோட காளைகள் இறங்குனதுக்கு பின்னாடி பலருக்கும் மரியாதை தரும், நம்பிக்கை தரும் ஒரு நிகழ்வா இது மாறிடுச்சு. எங்க சமூகத்தை சேர்ந்த 10 பேர் மதுரைல மட்டும் இப்போ ஜல்லிக்கட்டு காளை வளக்குறாங்க.. கை தட்டி, பிச்சை எடுத்து தான் பொழைக்கணும்னு ஏதும் இல்லையே… சுயமரியாதையா வாழ ஜல்லிக்கட்டு எங்களுக்கு பெரிய அளவுல உதவி செஞ்சுருக்கு. இன்னைக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல என்னைய சேர்த்து 6 திருநங்கைங்க அவங்க வளத்த காளைகளை வாடிவாசல்ல இறக்குறாங்க… இது மாற்றத்துக்கான ஆரம்பமா நான் பாக்குறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் சிந்தாமணி.
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Sindhamani-with-her-bull-Photo-credit-Karthik-Selvam.jpg)
ஏன் அவனியாபுரம், பாலமேடுவை விட அலங்காநல்லூரில் காளைகள விட ஆர்வம் காட்டுறீங்கன்னு கேட்ட போது, அலங்காநல்லூரில் காளைகள போட்டிக்கு அனுப்பும் போது தான் ஒரு கெத்து… ஏன்னா இது உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுங்க… எங்க கல்லணையே அலங்காநல்லூருக்கு ரொம்ப பக்கத்துல தான் இருக்கு.. அப்படி இருக்கும் போது இங்க காளைய இறக்குறது தான் கௌரவுமும் கூட என்றார் சிந்தாமணி.
உண்மையில் அலங்காநல்லூர் மற்ற இரண்டு ஜல்லிக்கட்டு நிகழ்வுகளைக் காட்டிலும் புகழ்பெற்ற ஒன்று தான். அலங்காநல்லூரில் தன்னுடைய காளைகளை இறக்க வேண்டும் என்பது சிந்தாமணியின் கனவு மட்டும் அல்ல. பல்வேறு எம்.பி.க்கள், முக்கிய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களின் காளைகளும் இங்கே தான் களம் காணுகின்றன. மற்ற இரண்டு போட்டிகளைக் காட்டிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அதிக அளவில் வெளிநாட்டு பார்வையாளர்களை தன் வசம் இழுத்துள்ளது. அதனால் தான் வெளிநாட்டு பார்வையாளர்கள் அமரவே தனி இடமும் அலங்காநல்லூரில் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.