ஓடும் ரயிலில் உயிருக்கு போராடிய குழந்தையை தக்க சமயத்தில் காப்பாற்றி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நர்ஸ் ஒருவர் அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.
சென்னை எண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் கோமதி. நாள்தோறும் குமிடிப்பூண்டியில் இருந்து புறநகர் ரயிலில் மருத்துவமனைக்கு இவர் பணிக்கு செல்வது வழக்கம்.
அவ்வாறே நேற்றைய தினமும் ரயிலில் தனது பயணத்தை காலை 7.30 மணிக்கு தொடங்கினார் கோமதி. ஆனால், அப்போது அவருக்கு தெரிந்திருக்கவில்லை தான் இன்று ஓர் குழந்தையை காப்பாற்றி உன்னதமான பணியை செய்யப் போகிறோம் என்று. எதேச்சையாக நடைபெறும் விஷயங்கள் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்பது நிதர்சனமே.
கோமதி பயணித்த அதே ரயில், பொன்னேரியை வந்தடைந்த போது, ஜெயச் சித்ராவும் அவரது ஒரு வயது ஆண் குழந்தை புவனேஷும் அந்த ரயிலில் பெண்கள் பயணிக்கும் பெட்டியில் ஏறியுள்ளனர்.
தாயும், குழந்தையும் ரயிலில் ஏறிய சில நிமிடங்களிலேயே, அக் குழந்தை வலிப்பு நோயால் பாதிப்படைந்துள்ளது. அடுத்த சில நொடிகளில் கண்கள் சொருகிய நிலைக்கு சென்ற அக் குழந்தையின் உடல் குளிர்ச்சியடைந்துள்ளது.
இதனை கண்டு பதறிய பெற்ற மனம், தன்னுடைய குழந்தை உயிரிழந்து விட்டது என்று எண்ணி, கதறி அழுதுள்ளது. தாயின் கதறலை பார்த்த ரயில் பயணிகளும் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளனர்.
அப்போது, அங்கு ஓடி வந்த நர்ஸ் கோமதி, அக்குழந்தைக்கு முதலுதவி அளித்து காப்பாற்றியுள்ளார். சக பயணி ஒருவரது உதவியுடன், குழந்தையை தலை கீழாக பிடித்து தட்டி விட்டும், சுவாச சுழற்சி முறையை உபயோகித்தும், குழந்தையின் வாயோடு வாய் வைத்து ஊதியும் முதலுதவி சிகிச்சைகள் செய்து குழந்தையை சாதாரண நிலைக்கு மீண்டும் கொண்டு வந்துள்ளார் கோமதி. குழந்தை சாதரான நிலைக்கு வந்ததும், அதனை கிள்ளிவிட்டு அழச் செய்துள்ளார். குழந்தையின் அழுகையை கண்டதும் அதன் தாய், கண்களில் ஆனந்த கண்ணீர் சொட்ட, சொட்ட கோமதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தக்க சமயத்தில் ஓடி வந்து குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அதனை காப்பாற்றிய கோமதிக்கு ரயில் பயணிகள் அனைவரும் நெஞ்சார வாழ்த்து தெரிவித்த சம்பவம், அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்த தவறவில்லை.