கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் 75 ஆம் ஆண்டு பவளவிழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. விழாவில், இந்து என்.ராம், திணமனி ஆசிரியர் வைத்தியநாதன், பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். அடுத்த நாள் 11ம் தேதி பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் அன்று மழை பெய்ததால், மீண்டும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி முரசொலி பவளவிழா நடைபெறும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, சென்னை கொட்டிவாக்கத்தில் பவளவிழா இன்று நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே மேடையில் திரண்டிருந்தன.
காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பார்வார்டு பிளாக் என 20-க்கும் மேற்பட்ட கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் இந்த மேடையில் அமர்ந்திருந்தனர். ஏறத்தாழ 11 ஆண்டுகளுக்கு பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
கடந்த சில தேர்தல்களாக திமுகவுக்கு எதிராக வியூகம் வகுத்து செயல்பட்டுக் கொண்டிருந்த மதிமுகவின் பொதுச்செயலர் வைகோவும், 2016 சட்டசபை தேர்தலுக்கு முன்னர் வரை அதிமுக கூட்டணியில் இருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், பார்வார்டு பிளாக் கதிரவனும் இன்றைய முரசொலி பவளவிழாவில் மேடையேறியதும் குறிப்பிடத்தக்கது.
விழாவில் பேசிய விடுதலை சிறுத்தைகளை கட்சித் தலைவர் திருமாவளவன், "மகனாக இருந்தால் குடும்ப வாரிசாகி விடலாம். ஆனால், உழைப்பால் அரசியல் வாரிசானவர் ஸ்டாலின். கருணாநிதி நடத்தியிருந்தால் எப்படி இருந்திருக்குமோ, அவ்வளவு வெற்றிகரமாக நடந்துள்ளது முரசொலி பவள விழா. முரசொலி என்பது ஏடல்ல, ஒரு இயக்கம். இந்தி திணிப்பை எப்பொழுதும் எதிர்ப்போம், இப்போது ஸ்டாலின் தலைமையில் எதிர்ப்போம்" என்றார்.
தமிழக அரசியலில் நிகழும் நிலையில்லா தன்மையினால், தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே மேடையில் திமுக ஏற்றியிருப்பது என்பது ஒரு மெகா கூட்டணிக்கான அச்சாரம் என்றே பார்க்கப்படுகிறது.