திங்கள் கிழமை முதல் திரையரங்குகள் மூடல்!

சினிமாத்துறை மீது விதிக்கப்படும் உள்ளாட்சி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள் கிழமை முதல் திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படும் என தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறும்போது: ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் திரையரங்குகளில் எவ்வளவு கட்டணம் செய்ய வேண்டும் என்பது குறித்து புதுச்சேரி அரசு தெளிவான விளக்கம் அளித்துள்ளது. ஆனால், தமிழக அரசு தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் தமிழக அரசு உள்ளாட்சி வரி என 30 சதவீத வரி விதித்துள்ளது. ஜிஎஸ்டி வரியுடன், உள்ளாட்சி வரியும் சேர்த்துக் கொண்டால் எங்களால் தொழில் நடத்துவது கடினம். சினிமாத்துறை வளர்ந்து வரும் வேளையில், இந்த வரி விதிப்பு மூலம் சினிமாத்துறை அழிவு நிலைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக திங்கள் கிழமை முதல், தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் காட்சிகள் ரத்து செய்யப்படவுள்ளன என்று கூறினார்,.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகளில் தற்போதைய வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

×Close
×Close