நீட் தேர்வு: உங்களுக்கு இந்த விவரங்கள் தெரியுமா?

எல்லா விதமான சர்ச்சைகளையும் கடந்து வரும் மே-7ம் தேதி நீட் தேர்வு நடக்கப்போகிறது.

ஜெய முருகன்

நீட் தேர்வு அவசியம் தேவைதானா என்ற வாக்குவாதங்கள் இன்னும் முடிந்த பாடில்லை. நீட் தேர்வை ரத்து செய்யவும் தொடர்ந்து கடிதங்கள் கொடுத்த வண்ணம்தான் இருக்கிறார்கள். ஆனாலும் எல்லா விதமான சர்ச்சைகளையும் கடந்து வரும் மே-7ம் தேதி நீட் தேர்வு நடக்கப்போகிறது. மருத்துவப் படிப்பு படிப்பதற்கான இந்த நீட் தேர்வு கட்டாயமாக அமல்படுத்தப்பட்டு மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ-யின் கட்டுப்பாட்டில் நடக்க இருக்கிறது.

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட இந்தியா முழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்திலிருந்து 88 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய சில விஷயங்கள் இங்கே.

`நீட்’ தேர்வைப் பொறுத்தவரை மத்திய அரசின் NCERT என்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பரிந்துரை செய்துள்ள +1, +2 பாடத் திட்டங்களின் அடிப்படையில் தான் கேள்விகள் கேட்கப்படும்.

சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களைப் படித்தால் மட்டுமே நீட் தேர்வை எழுத முடியும் என்ற கருத்து உண்மையில்லை.

  • NCERT-யின் தேசியக் கலைத் திட்ட  வடிவமைப்பு அடிப்படையில் தான் தமிழக அரசுப் பாடத்திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்தவர்களும் இத்தேர்வை சிறப்பாக எழுத முடியும்.
  • +1, +2 இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் இருந்து பாடத்திற்கு 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும்.
  • ஓவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள். மொத்தம் 720 மதிப்பெண்கள்.  ஒவ்வொரு தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.
  • ஜூன் 8-ம் தேதி மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.
  • அதன் பிறகு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் வெளியிடப்படும். அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும்.
  • இந்தத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவரின் மதிப்பெண் எவ்வளவோ, அதில் பாதி தான் தகுதி மதிப்பெண்.
  • தகுதி மதிப்பெண்களுக்கு  குறைவாக மதிப்பெண்கள் எடுத்தவர்களால் பணம் கொடுத்து கூட மருத்துப்படிப்பில் சேர முடியாது.
  • தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு எழுதலாம்.
×Close
×Close