Advertisment

மேகதாது அணைக்கு அனுமதிப்பதா? தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

மேகதாது அணைக்கு ஒப்புதல் கொடுப்பது தமிழகத்துக்கு பினாமி அரசு செய்யும் துரோகம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
மேகதாது அணைக்கு அனுமதிப்பதா? தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

மேகதாது அணைக்கு ஒப்புதல் கொடுப்பது தமிழகத்துக்கு பினாமி அரசு செய்யும் துரோகம் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisment

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து இன்று (ஆகஸ்ட் 17) பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை...

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் தருவதாக இருந்தால் மேகதாது அணையை கட்டிக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நலனை ஒட்டுமொத்தமாக தாரை வார்ப்பதற்கு சமமாகும். இதன்மூலம் தமிழக மக்களுக்கு பினாமி அரசு துரோகம் செய்திருக்கிறது.

காவிரிப் பிரச்சினைத் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, மேகதாது பகுதியில் அணை கட்டப்பட்டால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியும் என்று கர்நாடகத் தரப்பில் வாதிடப்பட்டிருக்கிறது. அதை உச்சநீதிமன்ற நீதிபதிகளும் ஆமோதித்த நிலையில், ‘‘காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் தருவதாக இருந்தால் மேகேதாட்டு அணைக் கட்டிக் கொள்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை’’ என்று தமிழக அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்த தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மேலும் நில நிபந்தனைகளையும் நீதிபதிகள் முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக எந்தவிதமான இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும் மேகேதாட்டு அணைக்கு தமிழகம் ஒப்புதல் அளித்தது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

1970களில் காவிரிப் பிரச்சினை தீவிரமான இருந்த போது, அதைப் பயன்படுத்திக் கொண்டு காவிரி துணை ஆறுகளின் குறுக்கே கர்நாடகம் 4 அணைகளை கட்டிக்கொண்டது. அப்போது அதைத் தடுக்க கலைஞர் தலைமையிலான திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, ‘‘நீங்கள் அணைகளைக் கட்டிக்கொள்ளுங்கள். எங்களுக்கு ஆட்சேபணையில்லை. மாறாக எங்களின் உரிமை பாதிக்கப்படாமல் இருப்பதற்கான உத்தரவாதம் கொடுங்கள்’’ என்று கூறினார்.

14.07.1971 அன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்திலும் கலைஞர் இதை பதிவு செய்திருக்கிறார். இதை பயன்படுத்திக் கொண்டு 4 அணைகளை கட்டிக் கொண்ட கர்நாடக அரசு அவற்றில் தேவையான அளவு தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்திக் கொள்கிறதே தவிர தமிழகத்திற்கு தருவதில்லை. அணைகள் நிரம்பினால் மட்டுமே கூடுதல் நீரை திறந்து விடுவதை கர்நாடகம் வழக்கமாக கொண்டுள்ளது.

தமிழக எல்லைக்கு அருகில் மேகதாது அணையைக் கட்டினாலும் அதே கதி தான் ஏற்படும். கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டி.எம்.சி ஆகும். இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில்லை. 67.14 டி.எம்.சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டி.எம்.சியாக அதிகரிக்கும்.

அதுமட்டுமின்றி, இடைப்பட்ட காவிரிப் பரப்பு, நீர்நிலைகள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் 200 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அத்தகைய தருணத்தில் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீரைக் கூட கர்நாடகம் கொடுக்காது. மேகதாது அணை கட்டப்பட்டால் அத்தகைய நிலை தான் ஏற்படும்.

மேகதாது அணை கட்டப்பட்டால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியும் என்பதே உண்மைக்கு மாறான தகவல் ஆகும். இதை நீதிபதிகள் வேண்டுமானால் நம்பலாம். கர்நாடத்தின் துரோகத்தை தொடர்ந்து அனுபவித்து வரும் தமிழகம் எவ்வாறு நம்பமுடியும்? காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய மேகேதாட்டு அணையின் பராமரிப்பு பணி மூன்றாவது அமைப்பிடம் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அப்படியே செய்தாலும் அதனால் எந்த பயனும் ஏற்படாது.

காவிரியில் கர்நாடக அரசே தண்ணீரைத் திறந்து விட்டால்கூட அம்மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி தண்ணீரை தடுப்பது வழக்கமாக இருக்கிறது. இப்போது அணையின் பராமரிப்பு மூன்றாவது அமைப்பிடம் விடப்பட்டாலும் அதேநிலை தான் ஏற்படும். மேலும் கர்நாடக அரசு இதுவரை வழங்கிய எந்த உறுதிமொழியையும் நிறைவேற்றியதில்லை. வருங்காலத்தில் தமிழகத்திற்கு நெருக்கடி ஏற்பட்டால் உச்சநீதிமன்றம் உதவிக்கு வரும் என்பதற்கு உத்தரவாதமில்லை.

1970களில் திமுக அரசு செய்தது போன்ற துரோகத்தைத் தான் இப்போது பினாமி அதிமுக அரசும் செய்திருக்கிறது. இதை அனுமதிக்கக்கூடாது. காவிரி வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும்போது மேகேதாட்டு அணை கூடாது என்பது தான் தமிழகத்தின் நிலை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Supreme Court Dr Ramadoss Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment