‘என்னை நாத்திகன் என்று அழைப்பதை நான் ஏற்கவில்லை’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன், தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு நற்பணி இயக்கத்திற்கான செயலியை அறிமுகப்படுத்தினார். அப்போது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார். ‘இந்து தீவிரவாதம்’ என்று குறிப்பிட்டதற்காக அவர்மீது பனாரஸ் காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கு குறித்து ஒரு நிருபர் கேட்டார்.
“உண்மையைச் சொன்னதற்கு தண்டனை கொடுத்தால் எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டுமோ, அப்படி எதிர்கொள்வேன். இந்துக்களைப் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. ஆனால், ‘இந்து விரோதி’ என்று நான் சித்தரிக்கப்படுகிறேன். எந்த மதமானாலும், எவராக இருந்தாலும் வன்முறையில் ஈடுபடக் கூடாது.
பிராமண சமுதாயத்தை நான் தேடிப்போனதே கிடையாது. கே.பாலச்சந்தர் என்னை அறிமுகப்படுத்தினார் என்பதைத் தவிர வேறெந்த தொடர்பும் கிடையாது. என் அப்பா, சகோதரர்கள் எல்லாருமே அந்த குலத்தில் இருப்பவர்கள்தான். நான் பிறந்த குலத்தில் இருந்து விலகிவந்தவன். என்னை, அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.
நாத்திகன் என என்னை அழைப்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அது ஆத்திகர்கள் என்னை வசதியாக அழைக்கக் குறிப்பிட்டது. எல்லாவற்றையும் நான் பகுத்தறியவே விரும்புகிறேன்” எனப் பதில் அளித்துள்ளார் கமல்ஹாசன்.