மும்பையில் அனைத்து நிகழ்சிகளையும் ரத்து செய்து விட்டு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக இன்று சென்னை வருகிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பிளவுபட்ட அதிமுக-வில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பின்னர், அணிகள் இணைப்பை உறுதி செய்யும் அறிவிப்பு இன்று நண்பகலில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியும், அவரது அணியில் இடம்பெற்றுள்ள இருவருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கபப்டலாம் எனவும் கூறப்படுகிறது.
பரபரப்பான இந்த் சூழலில் மகாராஷ்டிரா மற்றும் தமிழக ஆளுநரான வித்யாசாகர் ராவ், மும்பையில் இன்று ஒரு நாள் நிகழ்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு, அவசரமாக சென்னை திரும்புகிறார்.
ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக சென்னை வரவுள்ளதால், பதவியேற்பு, அமைச்சரவையில் மாற்றம் உள்ளிட்டவைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அதேபோல், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மூன்று நாள் பயணமாக நாளை சென்னை வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.