சென்னை மெரினாவில் முன் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் ராட்சத பேனரை காவல்துறையினர் அகற்றியுள்ளனர்.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மூன்று நாள் பயணமாக நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து புறப்பட்டு 22-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வரும் அவர், பாஜக மாநில நிர்வாகிகள், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள், பாஜக மாவட்டத் தலைவர்கள், கோட்டப் பொறுப்பாளர்கள், இளைஞரணி உள்ளிட்ட அணிகளின் மாநிலத் தலைவர்கள் உள்ளிட்டவர்களுடன் தமிழக அரசியல் நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், டிஜிட்டல் நூலகத்தை திறந்து வைத்து, மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு கோவை செல்லும் அவர் அங்கும் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்கிறார். பின்னர், 24-ம் தேதி மாலையில் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
அமித்ஷா வருகையின் போது, அதிமுக முக்கிய பிரமுகர்கள் பாஜக-வில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், அமித்ஷா வருகையில் எந்த உள்நோக்கமும் இல்லை என தமிழக பாஜக-வினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை வரும் அமித்ஷாவுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளித்து சிறந்த முறையில் கவனிக்க பாஜக-வினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். மேலும், சென்னை நகரம் முழுவதும் அமித்ஷாவை வரவேற்று ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை மெரினாவில் முன் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அமித்ஷாவின் 50 அடி உயர ராட்சத பேனரை காவல்துறையினர் அகற்றியுள்ளனர். மேலும், அமித்ஷாவை வரவேற்று காமராஜர் சாலையில் 50 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த மூன்று பேனர்களையும் அகற்றி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.