பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவின் தமிழக பயணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, கடந்த மே மாதம் முதல் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், தமிழகத்துக்கு மூன்று நாள் பயணமாக அமித்ஷா நாளை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆகஸ்ட் மாதம் 22, 23, 24 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்யவிருந்த அவர், சென்னை மற்றும் கோவையில் பாஜக மாவட்டத் தலைவர்கள், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள், கோட்டப் பொறுப்பாளர்கள், இளைஞரணி, பாஜக மாநில நிர்வாகிகளுடன் தமிழக அரசியல் நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க தமிழக பாஜக-வினர் திட்டமிட்டிருந்தனர். சென்னை முழுவதும் அமித்ஷவை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மீனவர் ஒருவரது வீட்டில் அமித்ஷா உணவு அருந்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமித்ஷா வரவையொட்டி தமிழகத்தில் பல்வேறு நிகழ்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவின் தமிழக பயணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜக-வை பலப்படுத்த கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் கட்சியின் மேலிடம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதேசயம், பாஜக மேலிட ஆசியுடன் தமிழக ஆளுங்கட்சி செயல்பட்டு வருகிறது என்றும், டெல்லி மேற்பார்வையில் அதிமுக அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது. அதேபோல், அமித்ஷா வருகைக்கு முன்பாகவே இரு அணிகளையும் இணைத்து விடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் கூறப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல், இன்று நண்பகலில் இரு அணிகளும் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளன.
மேலும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி வைத்து அதிக இடங்களை கைப்பற்றும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இத்தகைய சூழலில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் வருகை தமிழக அரசியளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.