சென்னை ராயப்பேட்டை பகுதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அமமுக கட்சி அலுவலகத்தை, பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில், கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திறந்து துவக்கிவைத்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, நடந்த பல்வேறு அரசியல் சம்பவங்களின் தொடர்ச்சியாக, டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை துவக்கினார். இந்த கட்சிக்கு இளைய தலைமுறையினர் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரிடையேயும் மிகுந்த வரவேற்பு இருந்து வந்தது. இதன் அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் இயங்கிவந்தது.
இந்த கட்டடம், அம்பாசமுத்திரம் முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவிற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இசக்கி சுப்பையா, சமீபத்தில் அதிமுகவுடன் இணைந்ததது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கட்சிக்கு புதிய அலுவலகம் அமைக்கும் பணியில் தினகரன் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
சென்னை ராயப்பேட்டை பகுதி என்றாலே, அதிமுக அலுவலகம் என்று தான் தற்போது உள்ளது. அதனை உடைக்கும் வகையில், அதிமுக அலுவலகத்திற்கு போட்டியாக, தமது கட்சி அலுவலகம் அமைய வேண்டும் என்பதில் தினகரன் கவனமாக இருந்து அதற்கான பணிகளை முடுக்கிவிட்டார்.
அதன்பலனாக, ராயப்பேட்டை மணிக்கூண்டு பகுதியில், மிகப்பிரமாண்டமான கட்டடத்தில் இன்று ( மார்ச் 12ம் தேதி) அமமுக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டடம், தஞ்சாவூரை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமானது என்று கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மக்களவை தேர்தலில், அமமுக கட்சிக்கு ஏற்பட்ட எதிர்பாராத தோல்வியால், நிலைகுலைந்த கட்சி தொண்டர்களுக்கு புத்துணர்வு மற்றும் உத்வேகம் அளிக்கும் விதமாக இந்த புதிய அலுவலக திறப்பு விழா அமைந்துள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து கட்சி தொண்டர்கள் நேற்று இரவு முதலே ராயப்பேட்டை பகுதியில் குவிந்து வருகின்றனர்.
அலுவலக திறப்பு விழாவில் அதிகளவில் தொண்டர்கள் குவிவர் என்பதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, போலீசார் போக்குவரத்து ஓழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எகஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil