பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் "ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்" என்ற நிகழ்ச்சியை தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி கூட்ட அரங்கில் நேற்று நடத்தியது. நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசியதாவது:
“ ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக காத்திருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் திருச்சி மாவட்டத்தில் தனி அலுவலகம் அமைத்து "ஆசிரியர் மனசு" என்ற பெட்டி வைக்கப்பட்டு, புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும் ஆசிரியர் மனசு என்ற மின்னஞ்சல் உருவாக்கப்பட்டு அதன் மூலம் தெரிவிக்கப்படும் கோரிக்கைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை எண் 101 மற்றும் 108 குறித்த கோரிக்கைகளை மிக விரைவில் வருகிற 10-ந் தேதி நடைபெற இருக்கும் மாநாட்டிற்கு முன்பாகவே முடித்து விட வேண்டும் என்பதன் அடிப்படையில் கோப்புகளை தயார் செய்து கொண்டிருக்கிறோம். சிறப்பான தேர்வு முடிவுகளை கொடுத்து தமிழ்நாட்டிற்கு முன்னோடி மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”