அசோக் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அன்புச்செழியனின் முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் சசிகுமாரின் அத்தை மகன் அசோக் குமார். மதுரையை சொந்த ஊராகக் கொண்ட இவர், சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிர்வாகியாகவும், இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். கடந்த வாரம் வளசரவாக்கத்தில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அசோக் குமார் எழுதிய கடிதத்தில், ‘மதுரை அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்தார் சசிகுமார். வளசரவாக்கம் போலீஸார், அன்புச்செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக 306 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த விஷயம் கேள்விப்பட்டு அன்புச்செழியன் தலைமறைவானார். அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளார் அன்புச்செழியன். இந்த மனு மீதான விசாரணை, இன்று நடைபெற இருக்கிறது.