அரசு விளையாட்டுத் திடல்களை வணிகமயமாக்க அன்புமணி கண்டனம்

பழக்க தோசத்தில் தமிழக அரசு விளையட்டுத் திடல்களுக்கு கட்டணம் நிர்ணயித்திருப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

DR Anbumani Ramadoss, AIADMK Alliance, PMK, அன்புமணி ராமதாஸ் பேட்டி
DR Anbumani Ramadoss, AIADMK Alliance, PMK, அன்புமணி ராமதாஸ் பேட்டி

தமிழக அரசின் விளையட்டுத் திடல்களை வணிகமயாக்க பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டு இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விளையாட்டை ஊக்குவிப்பதற்கு பதிலாக, விளையாடும் வழக்கத்தை ஒழிப்பதற்கான முயற்சிகளில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு ஈடுபட்டிருக்கிறது. தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டுத் திடல்களில் விளையாட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பது அதற்கே வழிவகுக்கும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 17 பல்வகை பயன்பாட்டுக்கான விளையாட்டு அரங்கங்களும், 25 சிறிய விளையாட்டு அரங்கங்களும் உள்ளன. அவற்றுக்கு அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் சென்று விளையாட அனுமதிக்கப்பட்டு வந்தது. இதனால் மாணவர்கள் தங்களின் விளையாட்டுத் திறனை அதிகரித்துக் கொள்ள முடிந்தது. ஆனால், இப்போது அனைத்து விளையாட்டுத் திடல்களையும் மக்கள் பயன்படுத்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ள கட்டண விகிதங்களின்படி மாநகர எல்லைக்குட்பட்ட இறகுபந்தாட்ட திடல்களை பயன்படுத்த தனிநபர்களுக்கு மாதம் ரூ.100 வீதம் ஆண்டுக்கு ரூ.1200 வரையும், மற்ற பகுதிகளில் மாதம் ரூ.300 வீதம் ஆண்டுக்கு ரூ.3600 வரையும் கட்டணம் செலுத்த வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்வோருக்கு மாதம் ரூ.250 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புக் கட்டணம் என்ற பெயரில் இது வசூலிக்கப்படுகிறது.

விளையாட்டுத் திடல்களைப் பயன்படுத்தக் கட்டணம் விதிக்கும் தமிழக அரசின் முடிவு அபத்தமானது ஆகும். இந்தியாவிலுள்ள அனைத்து மாநில அரசுகளும் தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைத்து விளையாட்டுத் திடல்களையும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு திறந்து விட்டிருப்பதுடன் அவர்களுக்கு பல்வேறு ஊக்கத் தொகைகளையும் வழங்குகின்றன. ஆனால், தமிழக அரசோ விளையாட்டுத் திடல்களை பயன்படுத்தவே கட்டணம் வசூலிக்கிறது. விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக கட்டணம் வசூலித்தால் திறமையும், ஆர்வமும் உள்ள துடிப்பான ஏழை மாணவர்கள் எவ்வாறு பயிற்சி பெற முடியும்? இது அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை பொசுக்கி விடாதா?

தமிழக அரசும் பன்னாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்கு லட்சங்களில் தொடங்கி கோடிகளில் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றால் கோடிகளில் பரிசு என்று அறிவித்து விட்டு மற்றொருபுறம் விளையாடுவதற்கு பயிற்சிக் கட்டணம் வசூலிப்பது முரண்பாடுகளில் உச்சம் அல்லவா? இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் நீச்சல் போட்டிகளில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பதக்கம் பெற்றவர்கள் கூட நீச்சல் குளங்களை பயன்படுத்திக் கொள்ள ஆண்டுக்கு ரூ.3000 வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்பது தான். தமிழக அரசின் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கதாகும்.

ஒரு மாநிலத்தில் உள்ள மக்கள் உடல்நலத்துடன் வாழ்வதை உறுதி செய்ய வேண்டியது அம்மாநில அரசின் கடமையாகும். விளையாட்டுத் திடல்கள் தான் மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மையங்களாகும். நடைபயிற்சியும், நீச்சல் பயிற்சியும் மனித உடலை ஆரோக்கியமான பராமரிப்பதற்கான அடிப்படைத் தேவைகள் ஆகும். இந்த அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல் நடக்கவும், நீச்சலடிக்கவும் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது.

விளையாட்டுத் திடல்களை வணிகமயமாக்க அரசு முயலக்கூடாது. அபத்தமான இந்த முடிவைக் கைவிட்டு, விளையாட்டுத் திடல்கள், நீச்சல் குளங்களில் இலவச பயிற்சியை அனுமதிக்க வேண்டும்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Anbumani condemnation to commercialize state play grounds

Next Story
கனமழை : விடுமுறையாலும்கூட காப்பாற்ற முடியாத இளம் தளிர்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com