6 ஆண்டுகளில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருப்பது ஏன்? : அன்புமணி

இந்தியாவின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, பாதுகாப்புக்கும் இது ஆபத்தாக மாறக்கூடும்.

இந்தியாவில் தொடர்ந்து லாபத்தில் இயங்கும் கார்ப்பரேட் துறைமுகமான காமராசர் துறைமுகத்தை மேன்படுத்துவதை விடுத்து தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டிக்கத்தக்கது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை எண்ணூரில் உள்ள காமராசர் துறைமுகத்தை முற்றிலுமாக தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து லாபத்தில் இயங்கும் கார்ப்பரேட் துறைமுகமான காமராசர் துறைமுகத்தை மேன்படுத்துவதை விடுத்து தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டிக்கத்தக்கது.

மத்திய அமைச்சரவைச் செயலாளர் தலைமையிலான அரசு செயலாளர்கள் குழு காமராசர் துறைமுகம், ஹெச்.எல்.எல் லைப் கேர், இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவத் தயாரிப்புகள் நிறுவனம், கர்நாடகா ஆண்டிபயாடிக்ஸ் மற்றும் மருத்துவப் பொருட்கள் நிறுவனம் ஆகியவற்றின் 100% பங்குகளை முழுமையாக தனியாருக்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது.

இதற்கு நிதி ஆயோக் அமைப்பும் ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு அனுமதி கிடைத்த பிறகு இவற்றை விற்பனை செய்யும் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை எண்ணூர் காமராசர் துறைமுகம் லாபத்தில் இயங்கிவரும் துறைமுகம் ஆகும். சென்னை துறைமுகம் மற்றும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட  காமராசர் துறைமுகம் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக லாபத்தில் இயங்கி வருகிறது.  

ஈவுத்தொகை, சேவை வரி, வருமானவரி, பணி ஒப்பந்த வரி ஆகியவற்றின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.1000 கோடிக்கும் மேல் செலுத்தியுள்ளது. காமராசர் துறைமுகத்தில் மத்திய அரசு ரூ.200 கோடியும்,  சென்னைத் துறைமுகம் ரூ.100 கோடியும் மட்டும் முதலீடு செலுத்திய நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு ரூ.328 கோடியும், சென்னைத் துறைமுகத்திற்கு ரூ.164 கோடியும் ஈவுத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. இது மத்திய அரசும், சென்னைத் துறைமுகமும் செய்த முதலீட்டை விட அதிகமாகும்.

அதுமட்டுமின்றி, கடந்த  ஆண்டுகளில் மட்டும் காமராசர் துறைமுகம் ரூ.2016.78 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது. துறைமுகத்தின் லாபம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் இந்தத் துறைமுகத்தை தனியாருக்கு விற்க வேண்டிய தேவை என்ன? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.

கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த ஜி.கே. வாசன் கப்பல் போக்குவரத்து அமைச்சராக இருந்த போது எண்ணூர் காமராசர் துறைமுகத்தின் குறிப்பிட்ட விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், அப்போது பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து துறைமுகத்தின் பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டது. அதன்பின் 6 ஆண்டுகளில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருப்பது ஏன்? எனத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அனல் மின்நிலையங்களுக்கான நிலக்கரி எண்ணூர் துறைமுகத்தின் மூலம் தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தத் துறைமுகம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டால், நிலக்கரி இறக்குமதிக்காக தனியார் நிறுவனங்களை தமிழகம் சார்ந்திருக்க நேரிடும்.

அது மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்காது. அத்துடன் கிழக்குக் கடற்கரையில் காரைக்கால், காட்டுப்பள்ளி, கிருஷ்ணாபுரம் ஆகிய துறைமுகங்கள் தனியார் வசம் உள்ளன. எண்ணூர் காமராசர் துறைமுகமும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டால் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் மட்டுமே அரசு துறைமுகங்களாக இருக்கும். இது கிழக்குக் கடற்கரையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கும். இந்தியாவின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, பாதுகாப்புக்கும் இது ஆபத்தாக மாறக்கூடும்.

ஒரு காலத்தில் லாபத்தில் இயங்கி வந்த சென்னைத் துறைமுகத்தில் நிலக்கரி கையாள தடை விதிக்கப் பட்டதைத் தொடர்ந்து அது நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சென்னைத் துறைமுகத்தின் வளர்ச்சிக்கு  போக்குவரத்து நெரிசல் தடையாக இருக்கும் நிலையில், எண்ணூர் துறைமுகம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு, அங்கிருந்து மகிழுந்து உள்ளிட்ட மற்ற பொருட்களின் ஏற்றுமதியும் அனுமதிக்கப்பட்டால் சென்னை துறைமுகம் அதன் வருவாயை முற்றிலுமாக இழந்து மூட வேண்டிய நிலை உருவாகும்.

மாறாக, எண்ணூர் துறைமுகத்தையும், சென்னை துறைமுகத்தையும் கடலோரப் பாலம் மூலம் இணைத்தால் இரு துறைமுகங்களுக்கும் வணிகம் அதிகரிக்கும். எனவே, எண்ணூர் காமராசர் துறைமுகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவைக் கைவிட்டு, சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களை  இணைப்பதன் மூலம் இரு துறைமுகங்களையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close