பிளஸ் 2 தேர்வு முடிவில் கடைசி இடத்தில் விழுப்புரம்: அன்புமணி ராமதாஸ் சொல்லும் காரணம்!

இதேநிலை நீடித்தால் வடமாவட்டங்கள் கல்வியில் மேலும் பின்தங்கிவிடும் ஆபத்து உள்ளது.

இன்று(16.5.18) வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில்,  வடமாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் குறித்து அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. முன்பு போல் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவ – மாணவிகளின்  பெயர்கள், பள்ளியின் விவரங்கள் ஆகியவை  அறிவிக்கப்படாத காரணத்தினால் இந்த தேர்வு முடிகள்  எந்தவித பரபரப்பும் இன்றி  அமைதியாகவே வெளியாகியது.

அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 87.7% தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 1% குறைந்துள்ளது. மேலும் மாவட்டம் வாயிலாகவும் தேர்ச்சி விழுக்காடு வெளியாகியுள்ளது.

இதில், 97% தேர்ச்சி விகிதத்தை விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது.96.3 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 96.1 சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாமிடத்தை பிடித்துள்ளது.  விழுப்புரம் மாவட்டம் 83. 35% தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தை பெற்றுள்ளது.

இதுக்குறித்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி  பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார்.  இதுக் குறித்து அவர் பேசியதாவது, “ கடந்த ஆண்டை விட இந்தாண்டில் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது பெரும் கவலையை அளிக்கிறது. தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடம் வழக்கம் போல வட மாவட்டங்களுக்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் 83.35% தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டின் அளவைவிட 03.01% குறைந்திருக்கிறது.

இதேநிலை நீடித்தால் வடமாவட்டங்கள் கல்வியில் மேலும் பின்தங்கிவிடும் ஆபத்து உள்ளது. எனவே, அரசு பள்ளிகள் மற்றும் வடமாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதற்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை  உடனே சரி செய்ய வேண்டும்” என்று  வலியுறுத்தியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close