“தளபதி” என பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் போதாது: அன்புமணி ராமதாஸ்

அதிமுக செய்தித் தொடர்பாளராக பா.ம.க. செயல்படுகிறது என்று கூறியிருப்பதன் மூலம் அண்ணன் துரைமுருகன் அவரது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

By: Updated: August 2, 2017, 07:37:23 PM

நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் பெட்ரோக் கெமிக்கல்ஸ் மண்டலம் அமைப்பதைக் கண்டித்து மக்களுடன் இறங்கி போராடாமல் திமுக அமைதி காப்பது ஏன்? என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கைக்கு, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்காமல் முதன்மை செயலாளர் துரைமுருகன் பெயரில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தளபதி என்று பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் போதாது. தளபதி என்பவர் தாமே முன்னின்று பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். மற்றவர்களை ஏவிவிட்டு எதிர்கொள்ளும்படி கூறக்கூடாது. எது எப்படியிருந்தாலும் அண்ணன் துரைமுருகன் பெயரில் நீண்ண்ண்ட நாட்களுக்குப் பிறகு அறிக்கை வந்திருப்பதில் மகிழ்ச்சி. பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான அறிக்கை என்றால் அது துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் பெயரில் தான் வெளிவரும். இதன் பின்னணியில் திமுக நடத்தும் ஜாதி அரசியலை தமிழக மக்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அண்ணன் துரைமுருகன் பெயரில் அறிக்கை வெளிவந்திருந்தாலும் கூட, இதை அவர் எழுதியிருக்க மாட்டார். இப்படி ஒரு அறிக்கை அவர் பெயரில் வந்தது அவருக்கே தெரியுமா? என்பது தெரியவில்லை. ஏனெனில், அண்ணன் துரைமுருகன் எழுதியிருந்தால் அது லாஜிக்காக இருந்திருக்கும். இப்படித் தப்பும் தவறுமாக இருந்திருக்காது. அறிக்கையின் இரண்டாவது பத்தியின் முதல் சில வரிகளில் பெட்ரோலிய மண்டலத்திற்கு திமுக ஆட்சியில் தான் அனுமதி கொடுக்கப்பட்டதாக மருத்துவர் அய்யா கூறுவதில் உண்மையில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அடுத்த சில வரிகளில் தமிழகத்திற்கு முதலீடு வர வேண்டும் என்பதற்காகத் தான் இத்திட்டத்திற்கு ஆய்வு நடத்த கலைஞர் அனுமதி கொடுத்தார் என்று கூறப்பட்டிருக்கிறது.

இதில் எது உண்மை என்பதை செயல்தலைவரிடம் கேட்க வேண்டுமா… அண்ணன் துரைமுருகனிடம் கேட்க வேண்டுமா? என்பது தெரியவில்லை. எது எப்படியாகினும் அதற்கு பிந்தைய வரிகளில் இத்திட்டத்திற்கு திமுக தான் ஆய்வு அனுமதி அளித்தது என்பதை ஒப்புக் கொண்டதற்கு நன்றி. இந்த பாவத்தையும், துரோகத்தையும் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள்.

2006-11 காலத்தில் திமுக கூட்டணியில் தானே பா.ம.க. இருந்தது, அப்போதே கலைஞரிடம் எடுத்துக் கூறி திட்டத்தை தடுத்திருக்கலாமே? என்று அண்ணன் துரைமுருகன் வினா எழுப்பியுள்ளார். சரியான கேள்வி தான். 2006-11 காலத்தில் திமுக கூட்டணியில் பா.ம.க. இல்லை. மாறாக பா.ம.க. ஆதரவுடன் திமுக ஆட்சி நடைபெற்றது. முக்கிய முடிவுகளை எடுக்கும் போது அது குறித்து ஆதரவளிக்கும் கட்சிகளுடன் விவாதிப்பது தான் மரபு. ஆனால், இந்த விஷயம் குறித்து பா.ம.க.வுடன் திமுக அரசு கலந்து பேசவில்லை. மாறாக இந்தத் திட்டம் குறித்து வெளியில் யாருக்கும் தெரியாமல் கலைஞரும், ஸ்டாலினும் கமுக்கமாக மறைத்து வைத்திருந்தனர் என்பது தான்.

முந்தைய திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை செயலராக இருந்த திமுக தலைமைக்கு நெருக்கமான ராமசுந்தரம் என்ற இ.ஆ.ப. அதிகாரி தி.மு.க. அரசின் பதவிக்காலம் முடிவதற்கு சில மாதங்கள் முன்பாக விருப்ப ஓய்வு பெற்று பெட்ரோலிய மண்டலத் திட்டத்தை செயல்படுத்தும் நாகார்ஜுனா உரம் மற்றும் இரசாயன நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். அந்த நிறுவனத்திற்கு சாதகமாகவே இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை செயலராக இருந்த இந்த அதிகாரிக்கு இத்திட்டம் குறித்து அப்போது தெரிந்த தகவல்கள் கூட பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த அண்ணன் துரைமுருகனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த திட்டம் குறித்து அப்போது பா.ம.க.வுக்கு தெரியவில்லை.

பெட்ரோலிய மண்டலம் குறித்து அப்போது தெரிந்திருந்தால் நிச்சயமாக கலைஞருக்கு அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்தியிருப்போம். கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்களை பாதிக்கும் திட்டங்களான துணை நகரத் திட்டம், தூத்துக்குடியில் டாட்டா டைட்டானியம் டையாக்சைடு திட்டத்திற்கு நிலங்களை பறிக்கும் திட்டம், சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்காக அப்பாவி மக்களின் நிலங்களைப் பறிக்கும் திட்டம், சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்கி திமுக தலைமைக்கு நெருக்கமான குடும்பத்திடம் ஒப்படைக்கும் திட்டம் ஆகியவற்றை முறியடித்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு அப்போதே பெட்ரோலிய மண்டலத் திட்டத்தை முறியடிப்பது என்பது சாத்தியப்படாத சாதனை அல்ல.

அதிமுக செய்தித் தொடர்பாளராக பா.ம.க. செயல்படுகிறது என்று கூறியிருப்பதன் மூலம் அண்ணன் துரைமுருகன் அவரது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். அண்ணன் துரைமுருகன் கும்பகர்ண உறக்கத்திலிருந்து இப்போது தான் விழித்திருப்பதாலோ என்னவோ அவருக்கு உண்மை நிலவரம் தெரியவில்லை. 2011-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்த நாளில் தொடங்கி இன்று வரை அதன் ஊழல்களை அன்றாடம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருவது பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பதை தமிழகம் அறியும். அவ்வாறு வெளியிடப்பட்ட அறிக்கைகளில் 80%-க்கும் மேற்பட்டவற்றை தான் அண்ணனின் செயல் தலைவர் காப்பியடித்து வெளியிட்டு வருகிறார் என்பதையும் மக்கள் அறிவார்.

தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி பா.ம.க. தான் என்பதை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதிமுகவை திமுக மட்டுமே எதிர்ப்பது போல அண்ணன் நினைத்துக் கொண்டிருந்தால் அந்த நோய்க்கு என்னிடம் மருந்து இல்லை. வேண்டுமானால் ஒன்று செய்யலாம்… 2011-ஆம் ஆண்டு முதல் அதிமுக அரசுக்கு எதிராக பா.ம.க. வெளியிட்ட அறிக்கைகள், போராட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றின் பட்டியலை நான் தருகிறேன். திமுக வெளியிட்ட அறிக்கைகள், போராட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றை அண்ணன் துரைமுருகன் கொண்டு வரட்டும்… இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்போம். அதிமுகவை அதிகம் எதிர்த்தது பா.ம.க. தான் என்றால் செயல்தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்பாரா?

2014-ஆம் ஆண்டின் இறுதியில் அதிமுக அரசு மீதான ஊழல் பட்டியலை ஆளுனரிடம் அளிக்கப் போவதாக மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்தார். அடுத்த சில நாட்களில் இதே அறிவிப்பை திமுகவும் வெளியிட்டது. பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்தவாறு 17.02.2015 அன்று அதிமுக அரசின் மீது 18 குற்றச்சாற்றுகள் கொண்ட 209 பக்க ஊழல் புகார் பட்டியலை ஆளுனரிடம் வழங்கியது. அதுமட்டுமின்றி முட்டை ஊழல், பருப்பு ஊழல் உள்ளிட்ட அதிமுக அரசின் பல்வேறு ஊழல்கள் தொடர்பாக வழக்கு தொடர்ந்து நடத்தி வருகிறது. ஆனால், இன்று வரை அதிமுக அரசு மீதான ஊழல் பட்டியலை ஆளுனரிடம் திமுக தரவில்லையே? அதற்கான காரணம் என்ன? அதிமுக அரசு மீது ஊழல் புகார் பட்டியல் அளிக்காமல் திமுக பின்வாங்கியது ஏன் என்பதை அண்ணன் விளக்குவாரா?

அவ்வளவு ஏன்… அதிமுக அரசை திமுக தான் எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கும், அண்ணன் துரைமுருகனுக்கும் திமுக வசமுள்ள தொகுதிகளில் நடைபெறும் ஒப்பந்தப் பணிகளில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 2% கமிஷன் வழங்கப்படுவதாவது தெரியுமா? தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை மூன்றில் இரு பங்கு அதிமுகவுக்கு, ஒரு பங்கு திமுகவுக்கு எனப்பிரித்து எழுதப்படாத ஒப்பந்தம் செய்து கொண்டதை மறைத்து விட்டு அண்ணன் பேசலாமா? அதிமுகவுடன் மறைமுகக் கூட்டணி அமைத்துக் கொண்டு ஊழல் முதல் துரோகம் அவரை அனைத்தையும் செய்யும் திமுக பா.ம.கவை குறை கூறுவது ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்பதாகவே இருக்கும்.

திமுகவால் தான் நான் மாநிலங்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் ஆனதாக அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தூக்கத்தில் உளறுவதைப் போல உளறிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் 2004 மாநிலங்களவைத் தேர்தலில் ஒரே ஒருமுறை திமுக உறுப்பினர்கள் 14 பேர் எனக்கு ஆதரவளித்தனர். அதன்பின் 2007, 2008, 2010 மாநிலங்களவைத் தேர்தல்களில் 18 பா.ம.க உறுப்பினர்களின் ஆதரவுடன் தான் திமுகவினர் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2006 தேர்தலில் 96 இடங்களில் மட்டுமே வென்ற திமுக பா.ம.க. ஆதரவுடன் தான் மைனாரிட்டி அரசு அமைத்தது என்பதையும், பா.ம.க. ஆதரவுடன்தான் 2006 முதல் 2011 வரை அந்த மைனாரிட்டி அரசு நீடித்தது என்பதையும் தீவிர திமுகவினரே மறுக்க மாட்டார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவுடன் தான் 2009 முதல் 2011 வரை செயல் தலைவர் அருமை நண்பர் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தார் என்பதை அண்ணனாலேயே மறுக்க முடியாது.

செயல்தலைவர் ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்த போது மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்து காவிரி பாசன மாவட்டங்களின் அழிவுக்கு வழிவகுத்தார். பெட்ரோலிய மண்டலத்தைக் கொண்டு வந்து நாகை, கடலூர் மாவட்டங்களின் சீரழிவுக்கு வித்திட்டவர் மு.க. அழகிரி. அண்ணனும் தம்பியும் போட்டிப் போட்டுக் கொண்டு, சோறு போடும் காவிரி பாசன மாவட்டங்களை பாழாக்கி விட்டனர். விவசாயிகளுக்கு மிக அதிக துரோகம் செய்த கட்சி என்றால் அது திமுக தான். 1974-ஆம் ஆண்டில் காவிரி நீர்ப்பகிர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்காதது, கர்நாடகத்தில் காவிரி துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகள் கட்டப்பட்டதை தடுக்காதது, 2007ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியான நிலையில், அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போதிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காதது என விவசாயிகளுக்கு திமுக இழைத்த துரோகங்களின் பட்டியல் நீளும். இவையெல்லாம் அண்ணன் துரைமுருகனுக்கு தெரியாதவையல்ல.

இப்போதும் கூட பெட்ரோலிய மண்டலத்தை எதிர்ப்பது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடாமல், அப்படி வெளியிட்டதாக அருமை நண்பர் ஸ்டாலின் கூறிய பொய்க்கு தான் துரைமுருகன் வக்காலத்து வாங்குகிறார். பெட்ரோலிய மண்டலத்தை எதிர்த்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தால் அதை துரைமுருகன் ஊடகங்களுக்கு வழங்கி நிரூபிக்கலாமே? அதற்கு அண்ணன் துரைமுருகன் தயாரா? மருத்துவர் அய்யா அவர்களையும், என்னையும் இவ்வளவு மோசமாக பிராண்டியதற்கு கைமாறாக அண்ணன் துரைமுருகனுக்கு அருமை நண்பர் ஸ்டாலினிடம் இருக்கும் இரு பதவிகளில் ஒன்றான திமுகவின் பொருளாளர் பதவி வழங்கப்படுமானால் அதை நினைத்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

இனியாவது இதுபோன்ற கீழ்த்தரமான அறிக்கை வெளியிடுவதை விடுத்து, ஆக்கப்பூர்வ அரசியல் செய்ய செயல்தலைவர் ஸ்டாலினுக்கு அண்ணன் கற்றுத்தர வேண்டும். அந்த வகையில் அண்ணனுக்கு இன்னொரு வேண்டுகோள். நீர்மேலாண்மை, விவசாயம், தொழில்துறை, கல்வி, சுகாதாரம், நிர்வாகம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் சார்ந்த விஷயங்கள் குறித்து பொது விவாதம் நடத்த வரும்படி செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக அறைகூவல் விடுத்து வருகிறேன்.ஆனால், அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதுவும் ஒருவகை ஆக்கப்பூர்வ அரசியல் தான் என்பதால் இதற்கு ஸ்டாலின் அவர்களை ஒப்புக்கொள்ள வைத்து, பொது விவாதத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என துரைமுருகன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக (Protected Agricultural Zone) அறிவிக்க வேண்டும் என்ற பா.ம.க. யோசனையை சட்டமாக்க பாடுபடுவது, திமுக ஆதரவாளர்களால் நடத்தப்படும் மது ஆலைகளை மூடி மக்களின் உயிரிழப்பைத் தடுப்பது போன்றவையே ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள். அதை விடுத்து அன்புமணியின் புல்லட் பயணம் ஏற்படுத்திய தாக்கத்தை நம்மால் ஆட்டோவில் தொங்கியும் ஏற்படுத்த முடியவில்லையே என்று புகைவது அல்ல என்பதையும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரும், செயல்தலைவரும் எனது அருமை நண்பருமாகிய மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, திமுகவின் வருங்கால பொருளாளர் அண்ணன் துரைமுருகன் எடுத்துக்கூற வேண்டும்” என்று தனது அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Anbumani ramadoss blame dmk stalin report of petrol region permission

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X