Advertisment

108 ஆம்புலன்ஸ்: கரையான் புற்றில் குடியேறும் கருநாகங்களை போன்றவர்கள் இரு திராவிட கட்சிகள்: அன்புமணி

வாரிசு இல்லாத சொத்துக்கு ஊரில் உள்ளவர்கள் அடித்துக் கொள்வதைப் போல, சட்டமன்றத்தில் பா.ம.க. இல்லாததால் இரு தரப்பினரும் தவறான தகவல்களை பதிவு செய்துள்ளனர்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anbumani Ramadoss. RK Nagar By-Poll, CBI, PMK, Anbumani Ramadoss,

கரையான் புற்றில் குடியேறும் கருநாகங்களைப் போன்றவர்கள் தான் தாங்கள் என்பதை இரு திராவிடக் கட்சிகளும் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றனர்.

Advertisment

இது குறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உயிர்காக்கும் 108 அவசர ஊர்தித்திட்டத்தைக் கொண்டு வந்தது யார்? என்பது குறித்து அதிமுக அமைச்சருக்கும், திமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே தமிழக சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்றிருக்கிறது.

வாரிசு இல்லாத சொத்துக்கு ஊரில் உள்ளவர்கள் அடித்துக் கொள்வதைப் போல, சட்டமன்றத்தில் பா.ம.க. இல்லாததால் இரு தரப்பினரும் தவறான தகவல்களை பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் 108 அவசர ஊர்தித் திட்டத்திற்கும், அதிமுக மற்றும் திமுக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுபோன்ற தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்தும் திறமையோ, பார்வையோ இரு கட்சிகளுக்கும் கிடையாது.

போட்டிப்போட்டுகொண்டு இலவசங்களைக் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக்கி, அவர்களின் வாக்குகளை விலைக்கு வாங்குவது மட்டும் தான் அந்தக் கட்சிகளுக்கு கைவந்த கலையாகும். 108 அவசர ஊர்தித் திட்டத்தை தாங்கள் தான் செயல்படுத்தியதாக இரு கட்சிகளும் சட்டமன்றத்தில் சண்டை போட்டு, அது ஊடகங்களிலும் பெரிய அளவில் செய்தியாக வெளிவந்துள்ள நிலையில், அதுகுறித்த உண்மை நிலையை தெரிவிக்க வேண்டியது எனது கடமையாகும்.

108 அவசர ஊர்தித் திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மத்திய சுகாதார அமைச்சராக 2004-ம் ஆண்டு பொறுப்பேற்ற நான், 2005-ம் ஆண்டில் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தைத் தொடங்கினேன்.

உலகின் மிகப்பெரிய சுகாதார இயக்கம் என்று போற்றப்பட்ட இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாகத் தான் 108 அவசர ஊர்தித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் முழுக்க முழுக்க என்னால் தயாரிக்கப்பட்டு, என்னால் செயல்படுத்தப்பட்டதாகும்.

ஒருமுறை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, அங்கு அனைத்து வகையான அவசர சேவைகளும் 911 என்ற எண்கொண்ட இலவச தொலைபேசி அழைப்பின் மூலம் வழங்கப்படுவதை அறிந்த நான், அதுபோன்ற சேவையை இந்தியாவிலும் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த சிந்தனையில் உதித்தது தான் 108 அவசர ஊர்தித் திட்டம் ஆகும்.

அந்த நேரத்தில் ஐதராபாத் நகரில் சிறிய அளவில் 108 சேவை செயல்படுத்தப்பட்டு வந்தது. எனினும், அதில் பெரிய அளவில் மருத்துவ வசதிகள் இல்லை. எனவே, அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய திட்டமாக 108 அவசர ஊர்திச் சேவையை உருவாக்கினேன்.

108 என்ற எண் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்ததால் நாடு முழுவதும் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இது தொடர்பாக அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, தொலைதொடர்பு அமைச்சர் ஆ.இராசா ஆகியோருடன் பேச்சு நடத்தி 108 என்ற எண்ணை வாங்கி நாடு முழுவதும் இத்திட்டத்தைத் தொடங்கினேன்.

108 அவசர ஊர்தி என்பது நோயாளிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் ஊர்தியாக மட்டும் இருக்கக் கூடாது; மாறாக, அனைத்து வசதிகளையும் கொண்ட நடமாடும் மருத்துவமனையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கடைபிடிக்கப்படும் முறைகளை பயன்படுத்தி அவசர ஊர்திகளை இயக்க முடிவு செய்யப்பட்டது.

அத்துடன், அவசர ஊர்தியில் செல்லும்போதே, ஆபத்தான நிலையில் நோயாளிகளை மருத்துவமனைக்கு செல்லும்வரை உயிர்பிழைத்திருக்கச் செய்ய வேண்டிய சிகிச்சைகளை அளிப்பதற்கான அனைத்து பயிற்சிகளும் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

உலக அளவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய அவசர ஊர்தி சேவையை நான் உருவாக்கி செயல்படுத்திய நிலையில், அத்திட்டம் தங்களால் கொண்டு வரப்பட்டது என அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினரும் அடித்துக் கொள்வது முழுப்பூசணிக்காயை கைப்பிடிச் சோற்றில் மறைப்பதற்கு சமமானதாகும்.

கரையான் புற்றில் குடியேறும் கருநாகங்களைப் போன்றவர்கள் தான் தாங்கள் என்பதை இரு திராவிடக் கட்சிகளும் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றனர். இதற்கு முன் திமுக தலைவர் கருணாநிதி ஒருமுறை 108 அவசர ஊர்திச் சேவைத் திட்டம் தமது திட்டம் என்றார். அதை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியுமா? என்று கேட்டபோது பதில் கூறமுடியாமல் பின்வாங்கிவிட்டார். இப்போது அவரது தொண்டர்கள் இந்தத் திட்டத்திற்கு உரிமை கொண்டாட புறப்பட்டிருக்கின்றனர்.

108 Ambulance

தமிழகத்தில் 108 அவசர ஊர்தித் திட்டம் 15.09.2008 அன்று தொடங்கப்பட்டது. அதற்கு முன்பே நாடு முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து விட்டது. இன்றைய நிலையில் 22 மாநிலங்களில் 108 அவசர ஊர்தித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பல மாநிலங்களுக்கு நானே நேரில் சென்று இத்திட்டத்தை தொடங்கி வைத்தேன். அந்த மாநிலங்களில் எல்லாம் அதிமுகவும், திமுகவும் தான் ஆட்சி செய்தனவா? என்பதை அக்கட்சிகள் விளக்க வேண்டும்.

தமிழகத்தில் 108 திட்டத்தை செயல்படுத்துவதற்காக நிதி உதவியையும், அதன்பின்னர் இத்திட்டதிற்கான தொடர் செலவுகளையும் எனது தலைமையிலான மத்திய சுகாதார அமைச்சகத்திடமிருந்து தமிழக அரசு வாங்கியது உண்மையா? என்பதை திமுக ஆட்சியில் சுகாதார அமைச்சர்களாக இருந்த சாத்தூர் இராமச்சந்திரனும், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் விளக்க வேண்டும்.

108 சேவையின் கீழ் வழங்கப்படும் அவசர சிகிச்சைக்காக ஆகும் செலவுகளை முதல் மூன்று ஆண்டுகளுக்கு மத்திய அரசே ஏற்றுக் கொண்டது. பிரசவம் உள்ளிட்ட சாதாரண சேவைகளுக்கு ஆகும் செலவை இப்போது வரை மத்திய சுகாதார அமைச்சகம் தான் ஏற்றுக் கொள்கிறது. 108 அவசர சேவை ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது என கூசாமல் பொய் கூறும் குட்கா ஊழல் புகழ் விஜயபாஸ்கரால் இதை ஆதாரத்துடன் மறுக்க முடியுமா?

இதற்குப் பிறகும் திமுகவினருக்கு தெளிவு பிறக்கவில்லை என்றால், 108 என்ற எண்ணை இதற்கான தனிப்பயன்பாட்டுக்காக வாங்கியது அன்புமணி இராமதாசா, கலைஞரா, ஜெயலலிதாவா? என்பதை திமுகவைச் சேர்ந்த முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.இராசாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

அரசியல் லாபத்திற்காக பொய் கூறுவது திராவிடக் கட்சிகளின் எழுதப்படாத கொள்கைகளில் ஒன்று என்பது ஊரறிந்த உண்மை. ஆனால், அனைத்துக்கும் ஓர் எல்லை உண்டு. அடுத்தவர் பெருமையை கொள்ளையடிக்கும் அரசியலை இனியாவது கைவிட்டு, மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை செயல்படுத்தும் நாகரிக அரசியலுக்கு இரு திராவிடக் கட்சிகளும் மாற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Dmk Anbumani Ramadoss Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment