தமிழகத்திலுள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களின் பெயர்ப் பலகைகள், முத்திரைகள், மத்திய அரசு அலுவலர்களின் பெயர்ப் பலகைகள் மற்றும் முத்திரைகளில் தமிழையும் பயன்படுத்துவதை மத்திய அரசு கட்டாயமாக்க வேண்டும். இதை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழி தமிழ்ழாய்வு மத்திய நிறுவனத்தின் பெயர்ப்பலகைகள் மற்றும் முத்திரைகளில் தமிழுக்கு இடம் அளிக்கப்படவில்லை என்றும், சமூக வலைத்தளங்களில் இதுதொடர்பாக வெளியான செய்திகளைப் பார்த்து தமிழறிஞர்கள் கொந்தளித்திருப்பதாகவும் தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக ஆய்வு நடத்தப்படும் நிறுவனத்திலேயே தமிழுக்கு இடமில்லை என்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கெல்லாம் காரணம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை தமிழ் சார்ந்த அமைப்பாக பார்க்காமல் நடுவண் அரசு நிறுவனமாக அதிகாரிகள் பார்ப்பது தான்.
வழக்கமாக பெரும்பாலான மத்திய அரசு நிறுவனங்களில் அந்த அலுவலகம் சார்ந்த முத்திரைகள் மற்றும் அதிகாரிகளின் பெயர்ப் பலகைகள் அனைத்தும் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே எழுதப்படுகின்றன. அதேநேரத்தில் பெயர்ப் பலகைகள் மற்றும் முத்திரைகளில் மாநில மொழிகளையும் சேர்ப்பதற்கு எந்தத் தடையும் இல்லை.
சென்னையில் சாஸ்திரிபவனில் உள்ள பெரும்பாலான மத்திய அரசு அலுவலகங்கள், அகில இந்திய வானொலி நிலையம், தொலைக்காட்சி நிலையம், கோட்டையில் செயல்பட்டு வரும் பாதுகாப்புத் துறைக்கான பத்திரிகை தகவல் அலுவலகம் ஆகியவற்றின் முத்திரைகள் மற்றும் பெயர்ப்பலகைகளில் தமிழ் மொழியும் இடம் பெற்றிருக்கிறது. எனினும் முத்திரைகளில் தமிழைச் சேர்ப்பது விருப்பம் சார்ந்ததாக உள்ள நிலையில், இதை கட்டாயமாக்கும்படி பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் நினைத்தால் அதன் முத்திரைகள் மற்றும் அங்கு பணியாற்றும் அதிகாரிகளின் பெயர்ப்பலகைகளில் தமிழையும் சேர்த்துக் கொள்ள முடியும். ஆனால், அந்த நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதற்கு நிரந்தரமான இயக்குனர் நியமிக்கப்படாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும்.
தமிழாய்வு நிறுவனம் மத்திய அரசின் நிறுவனம் என்பதால், அதில் இயக்குனர் இல்லாத நிலையில் பொறுப்பு இயக்குனராக தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு மத்திய அரசு அதிகாரி நியமிக்கப்படுகிறார். பல நேரங்களில் மத்திய பொதுப்பணித் துறையில் உள்ள பொறியாளர்களும், சுங்கத் துறையில் பணியாற்றும் அதிகாரிகளும் கூட இப்பணியில் அமர்த்தப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் தமிழ் தெரியாத வட இந்தியர்களாகத் தான் இருப்பார்கள்.
தமிழாய்ந்த தமிழறிஞர்களை அமர்த்த வேண்டிய இடத்தில் தமிழே தெரியாதவர்கள் அமர்த்தப்படுவதால் அங்கு தமிழுக்கு முக்கியத்துவமோ, மரியாதையோ கிடைப்பதில்லை. இப்போது கூட இந்த நிறுவனத்தின் பொறுப்பு இயக்குனராக இருப்பவர் திருச்சியிலுள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் பதிவாளரான பழனிவேல் என்பவர்.
அடிப்படையில் தொழில்நுட்ப பேராசிரியரான இவருக்கு தமிழில் வல்லமை கிடையாது. அதுமட்டுமின்றி, எப்போதாவது மட்டுமே செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு வந்து செல்வார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு தமிழறிந்த, தமிழ் உணர்வுள்ள ஒருவர் இயக்குனராக நியமிக்கப்பட்டிருந்தால், அந்த நிறுவனத்தின் முத்திரைகள் மற்றும் அங்கு பணியாற்றும் அதிகாரிகளின் பெயர்ப்பலகைகளில் தமிழை சேர்த்திருப்பார், சேர்த்திருக்க முடியும், அதற்கு எந்தவித தடையுமில்லை.
அதுமட்டுமின்றி, நிலையான இயக்குனர் இல்லாததால் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, செம்மொழி நிறுவனத்திற்கு உடனடியாக நிலையான இயக்குனரை நியமிக்க மத்திய அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்திலுள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களின் பெயர்ப் பலகைகள், முத்திரைகள், மத்திய அரசு அலுவலர்களின் பெயர்ப் பலகைகள் மற்றும் முத்திரைகளில் தமிழையும் பயன்படுத்துவதை மத்திய அரசு கட்டாயமாக்க வேண்டும். இதை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.