Advertisment

அமைச்சருடன் விவாதிக்க நேரம், இடம் அறிவித்த அன்புமணி ராமதாஸ்: அரங்கேறுமா ஆட்டம்?

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடு குறித்து அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதிக்க இடம், நேரம் அறிவித்த அன்புமணி ராமதாஸ்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
அமைச்சருடன் விவாதிக்க நேரம், இடம் அறிவித்த அன்புமணி ராமதாஸ்: அரங்கேறுமா ஆட்டம்?

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து தம்முடன் விவாதம் நடத்தத் தயாரா? என்று அமைச்சர் செங்கோட்டையன் சவால் விடுத்திருந்த நிலையில், அதையேற்று அவருடன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தேன். அதன்படி விவாதத்திற்கான நாளையும், இடத்தையும் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அமைச்சர் அதை விடுத்து விவாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் நாங்களே செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார்.

Advertisment

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடு குறித்து விவாதம் நடத்தத் தயாரா? என சவால் விடுத்தது அமைச்சர் செங்கோட்டையன் தான். அவரது சவாலை நான் ஏற்றுக் கொண்ட நிலையில் அதற்கான இடத்தையும், தேதியையும் முடிவு செய்ய வேண்டியது அமைச்சர் தான். ஆனால், அதையும் நானே முடிவு செய்ய வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியிருப்பது பெருந்தன்மையா... பயமா? என்று தெரியவில்லை. ஆனாலும் அவரது இந்த அறைகூவலையும் ஏற்று விவாதத்திற்கான ஏற்பாடுகளை பாமக மேற்கொள்ளும்.

பள்ளிக்கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வதும், சவால்களை எதிர்கொள்வதும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு புதிதல்ல. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி என்ற பதத்தையே மருத்துவர் அய்யா அவர்கள் தான் 20 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கி, தமிழகத்தில் அதை நடைமுறைப்படுத்துவதற்கு காரணமாக இருந்தார். 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5,6,7 ஆகிய தேதிகளில் சென்னையில் ‘இன்றையத் தேவைக்கு ஏற்ற கல்வி முறை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சி, அதில்  24 முன்னாள் துணைவேந்தர்களை அழைத்து பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி குறித்து விவாதித்தது.  அதுமட்டுமின்றி ‘பள்ளிக்கல்வி: இன்றையத் தேவைக்கேற்ற கல்வி முறை’ என்ற தலைப்பில் ஆவணம் தயாரித்து வெளியிட்டோம். இந்த ஆவணத்தை அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன்சிங் உள்ளிட்டோரிடம் ஒப்படைத்து கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படி வலியுறுத்தியது.

ஆனால், செங்கோட்டையன் அங்கம் வகிக்கும் அதிமுக அரசு தமிழகத்தில் கல்வித்துறைக்கு செய்த சேவை என்ன? என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க அவருடனான விவாதம் உதவியாக இருக்கும். தமிழகத்திலுள்ள பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டு வந்த நிலையில், மெட்ரிக்குலேசன் பள்ளிகளை அனுமதித்து கல்வியை கடைச்சரக்காகவும், தரமற்றதாகவும் மாற்றியது அதிமுக தான். இப்போதும் கூட  பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றவுடன், சொந்த வருவாயை பெருக்கிக் கொள்வதற்காக நடத்திய ஆசிரியர்கள் இடமாற்ற ஊழலால் பின்தங்கிய மாவட்டங்களில் ஏழைகளின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக கலந்தாய்வு மூலம் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும்போது  அனைத்துப் பள்ளிகளிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.

எனினும், செங்கோட்டையனும், அவருக்கு முன்பு இருந்த அமைச்சர்களும் ரூ. 5 லட்சத்தை அளவீடாகக்  கொண்டு இடமாற்ற ஆணைகளை வழங்கியதால் இராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும், வேலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளிலும் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் 60% காலியாக உள்ளன. அதேநேரத்தில்  கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, ஈரோடு, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளனர். இதனால் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன.

இவை குறித்து விவாதிப்பதுடன், தமிழகத்தின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும் தெரிவிக்க இந்த விவாதம் சிறந்த வாய்ப்பாக அமையும். இவ்விவாதத்தை ஆக்கப்பூர்வமான வகையில் நடத்த வேண்டும் என்பது தான் எனது விருப்பம். அதன்படி, அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டவாறு வரும் 12.08.2017 மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை விவாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் இந்த விவாதம் நடைபெறும்.

இதையேற்று இவ்விவாதத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நண்பர் செங்கோட்டையன் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறேன். செங்கோட்டையன் தேவையில்லாத  வேறு சில விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார். அவர் விரும்பினால் அதுகுறித்தும் விவாதிக்க நான்  தயாராக இருக்கிறேன். இவ்விவாத நிகழ்ச்சியை மக்கள் பார்த்து அறிய வசதியாக  தொலைக்காட்சிகளில் தொடர் நேரலையாக ஒளிபரப்புவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Anbumani Ramadoss Minister Sengottaiyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment