மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் இடம் பெற வில்லை என்பது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பா.ம.க தலைவர் அண்புமணி ராமதாஸ், பட்ஜெட்டில் தமிழ்நாடு பெய வந்திருக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் எப்படியாவது ஒரு 20-25 எம்.பி.க்களை ஜெயித்து கொடுத்திருக்க வேண்டும் என்று கூறியது சர்ச்சையாகி உள்ளது. மேலும், இதுதான் தமிழ்நாடு பெயர் வராததற்கு காரணமா என்றதற்கு இல்லை சொல்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் புதன்கிழமை (ஜூலை 24) மனு அளித்தார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசே நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.
வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, சென்னையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் மனு அளித்த பின் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழ்நாடு இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விரைவில் வர உள்ளது. உச்ச நீதிமன்றம் என்றைக்கு வேண்டுமானலும் விசாரணைக்கு எடுக்கலாம். அப்படி எடுத்தார்கள் என்றால், அவர்கள் கேட்கிற முதல் கேள்வி தமிழ்நாட்டிலேயே தரவுகள் இருக்கிறதா? தமிழ்நாட்டிலே ஏன் 69 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர வேண்டும், தரவுகள் இருக்கிறதா என்று கேட்பார்கள். நிச்சயமாக தமிழக அரசிடம் தரவுகள் இல்லை. பழைய தரவுகள்தான் இருக்கிறது. புதிய தரவுகள் இல்லை. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக சர்வே எடுக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்கிறார், அது தவறானது. அதை சட்டமன்றத்திற்குள்ளே சொல்வது இன்னும் தவறானது.
தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. இந்த அதிகாரம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பை இரண்டு முறை சொல்லியிருக்கிறார்கள். தமிழக அரசுக்கு தரவுகளை சேகரிக்க அதிகாரம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் 2 முறை தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஒரு தீர்ப்பு 2010-ல், அடுத்த தீர்ப்பு 2022-ல் அளித்தது. இந்த இரண்டு தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். தமிழக அரசுக்கு கணக்கெடுக்க, தரவுகள் எடுக்க அதிகாரம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறது. ஆனால், முதலமைச்சர் சட்டமன்றத்தில் அதிகாரம் இல்லை என்று சொல்லியிருக்கிறார். மத்திய அரசு எடுப்பது சென்சஸ், நாங்கள் கேட்பது சர்வே, எது எடுத்தாலும் கணக்கெடுப்புதான். சென்சஸ் எடுத்தால் கணக்கெடுப்பு முழுமையாக வராது. மத்திய அரசு எடுக்கிற அந்த கணக்கெடுப்பு முழுமையாக வராது. நாங்கள் கேட்பது மாநில அரசு சர்வே எடுத்தால்தான் முழுமை அடையும். உதாரணம், மலைக்குறவர் சமுதாயம் இருக்கிறது. இந்த மலைக்குறவர் சமுதாயம் தமிழ்நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியாது. அவர்கள், எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியாது. மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினால், மொத்தம் எத்தனை பேர் மலைக்குறவர்கள் இருக்கிறார்கள் என்றுதான் தெரியும். ஆனால், மாநில அரசு அந்த சர்வே எடுத்தார்கள் என்றால் அந்த மலைக்குறவர்களுக்கு வீடு இருக்கிறதா, எத்தனை பேர் வேலைக்கு போயிருக்கிறார்கள், எங்கே எங்கே இருக்கிறார்கள், அரசு வேலை எத்தனை பேருக்கு இருக்கிறது, நிலம் இருக்கிறதா இது எல்லா சர்வேவும் மாநில அரசு எடுக்க வேண்டும். அதிகாரம் இருந்தும் சர்வே எடுக்கமாட்டேன் என்று சொன்னால் ஸ்டாலினுக்கும் சமூகநீதிக்கும் சம்பந்தம் இருக்கிறதா, இல்லை.
இந்நேரம் கலைஞர் இருந்திருந்தால் ஒரு நிமிடமும் யோசித்திருக்க மாட்டார். அடுத்த கணமே கையெழுத்து போட்டு கணக்கெடுப்பு நடத்துங்க என்று சொல்லியிருப்பார். ஏனென்றால், கலைஞருக்கு உண்மையிலேயே சமூகநீதி உணர்வு அதிகம் இருந்தது. ஆனால், அவருடைய மகன் ஸ்டாலினுக்கு சமூகநீதி உணர்வு இருக்கிறதா, இல்லையா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நான் ஸ்டாலினை 3-4 முறை பார்த்திருக்கிறேன். பார்க்கும்போது செய்வோம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், சட்டமன்றத்தில் செய்ய முடியாது என்று சொல்வதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
இன்றைக்கு நாங்கள் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவரைப் பார்த்து வலியுறுத்தியிருக்கிறோம். 69 விழுக்காடு இடஒதுக்கீட்டைக் காப்பாற்றுங்கள் என்று வலியுறுத்தியிருக்கிறோம். 10.5 இடஒதுக்கீடு கொடுங்கள். தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு அரசியலமைப்பில் 9-வது அட்டவணையில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு எடுக்கப்பட்டிருக்கிறது. என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அப்படி ஒருவேளை, உச்ச நீதிமன்றம் 69 விழுக்காட்டை தமிழ்நாட்டில் ரத்து செய்தால், அன்றைக்கே தி.மு.க ஆட்சி போய்விடும். அதற்கு முழு பொறுப்பு முதலமைச்சர் ஸ்டாலின்தான். வரலாற்றில் ஸ்டாலின் பெயரை வேற மாதிரி எழுதுவார்கள். முக்கியமான பிரச்னையை நான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினைச் சுற்றி 4-5 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சமூகநீதிக்கும் சம்பந்தம் இல்லை. அவர்கள் வியாபாரிகள். அவர்கள் முதலமைச்சரை தவறான திசையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒவ்வொரு தெருவிலும் எந்த ஜாதி, எந்த மதம், எந்த கட்சி என்று காசு கொடுப்பதற்கு கணக்கெடுக்கிறீர்கள் இல்லையா, ஏன் அதை தமிழ்நாட்டில் கணக்கெடுப்பு நடத்தினால் என்ன பிரச்னை. உங்களுக்கு தேர்தலுக்கு மட்டும் கணக்கெடுப்பு வேண்டும், ஆனால், உங்களுக்கு சமூகநீதி கணக்கெடுப்பு வேண்டாம். இடஒதுக்கீடு கொடுப்பதற்கு கணக்கெடுப்பு வேண்டாம், இந்த கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
நான் ஏன் இந்த கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்கிறேன் என்றால் எல்லா சமுதாயமும் என்ன நிலையில் இருக்கிறார்கள். எந்த சமுதாயம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், எந்த சமுதாயம் பின் தங்கியிருக்கிறார்கள், எந்த சமுதாயம் அதிக அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள், கடந்த 50-60 ஆண்டுகள் காலமாக தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டில்பயன்பெற்றுக்கொண்டிருக்கிறார்கள், யார் பயன்பெறவில்லை என்பதை கணக்கெடுக்க வேண்டும்.” என்று கூறினார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் இடம் பெற வில்லை என்பது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பா.ம.க தலைவர் அண்புமணி ராமதாஸ், பட்ஜெட்டில் தமிழ்நாடு பெய வந்திருக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் எப்படியாவது ஒரு 20-25 எம்.பி.க்களை ஜெயித்து கொடுத்திருக்க வேண்டும் என்று கூறியது சர்ச்சையாகி உள்ளது. மேலும், இதுதான் தமிழ்நாடு பெயர் வராததற்கு காரணமா என்றதற்கு இல்லை சொல்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.