அரசுப் பணியிடங்களை பெருமளவில் குறைக்க சதி... இளைஞர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்: அன்புமணி

பணியாளர்கள் சீரமைப்புக் குழு அமைக்கும் முடிவை அரசு கைவிட மறுத்தால் மிகப்பெரிய போராட்டம் என அன்புமணி எச்சரிக்கை

பணியாளர்கள் சீரமைப்புக் குழு அமைக்கும் முடிவை அரசு கைவிட மறுத்தால் இளைஞர்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை செயல்படுத்தியுள்ள தமிழக அரசு, ஓசையின்றி மற்றொரு நடவடிக்கையையும் மேற்கொண்டிருக்கிறது. அரசுப் பணியிடங்களின் எண்ணிக்கையை பெருமளவில் குறைக்கும் வகையில் பணியாளர் சீரமைப்புக் குழுவை அமைத்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பணியிடங்களை ஆய்வு செய்து, அவற்றில் பெரும்பாலானவற்றைத் தேவையில்லாத பணியிடங்களாக அறிவித்து அவற்றை ஒழிப்பது, மீதமுள்ள பணியிடங்களை அயல் பணி முறையிலோ, ஒப்பந்த அடிப்படையிலோ நிரப்புவது ஆகியவைதான் பணியாளர் சீர்திருத்தக்குழு அமைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் ஆகும். இதுகுறித்த ஆட்சியாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்றவர்கள்தான் பணியாளர்கள் குழுவில் சேர்க்கப்படுவார்கள். தமிழக அரசின் இந்தத் திட்டம் மிக மோசமான, அரசு வேலைவாய்ப்புகளை ஒழிக்கக்கூடிய சதியாகும்.

அரசு பணியிடங்களில் தேவையில்லாத பணியிடங்கள் என்று எதுவும் கிடையாது. இன்னும் கேட்டால் வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு திராவிடக் கட்சிகள் புதிது புதிதாக அறிவிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த இன்னும் அதிக அளவில் பணியாளர்கள் தேவைப்படுவார்கள். அதைக் கருத்தில் கொண்டு புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கு பதிலாக இருக்கும் பணியிடங்களை ஒழிப்பது நல்ல நிர்வாகத்துக்கு அழகல்ல. அரசு நிர்வாகப் பணிகளை விரைவுபடுத்துவதற்குப் பதிலாக மந்தப்படுத்தவே வகை செய்யும்.

அரசின் வருவாய் செலவினங்களைக் குறைக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தமிழக அரசின் சார்பில் கூறப்படுவது அபத்தத்திலும் அபத்தமானது ஆகும். அரசின் செலவுகளும் அரசு ஊழியர்களின் ஊதியமும் ஆண்டுக்காண்டு அதிகரிப்பது இயல்பான ஒன்றுதான். நிர்வாகத்தின் செலவுகள் எந்த அளவுக்கு அதிகரிக்கின்றனவோ, அதே அளவுக்கு அரசு வருவாயை அதிகரிக்க வேண்டும். அதுதான் மக்கள் நலனில் அக்கறையுள்ள, திறமையான அரசுக்கு அடையாளம் ஆகும்.

ஆனால் பினாமி அரசுக்கோ மது விலையை உயர்த்துவதைத் தவிர, வருவாயைப் பெருக்குவதற்கான வேறு எந்த வழிமுறைகளும் தெரியாது. காரணம், அனைத்துத் துறைகளிலும் நிலவும் ஊழல்தான். உதாரணமாக தமிழகத்திலுள்ள மணல் குவாரிகளில் ஒவ்வொரு ஆண்டும் அள்ளப்படும் ஆற்று மணலின் மதிப்பு ரூ.40,000 கோடி ஆகும். ஆனால், மணல் விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்துள்ள வருவாய் ரூ.86 கோடி மட்டுமே.

மீதமுள்ள மணல் வருவாய் முழுவதும் மாமூலாக முதலமைச்சர், அமைச்சர்கள், ஆளுங்கட்சி மாவட்ட செயலர்கள் மற்றும் அதிகாரிகளால் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இவ்வாறாக பல்வேறு துறைகளில் இருந்து அரசுக்கு வர வேண்டிய வருமானம் முழுவதும் ஆட்சியாளர்களுக்கு சென்று விடுவதால்தான் தமிழக அரசின் வருவாய் வரவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.

தமிழகத்திலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 79 லட்சம் பேர் படித்து விட்டு, அரசு வேலைக்காகப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் ஆண்டுக்கு 10,000 முதல் 15,000 பேருக்கு அரசு வேலை கிடைப்பதே குதிரைக்கொம்பாக உள்ளது. 5 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கும் போதிலும், அவற்றை நிரப்ப தமிழக ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது பணியாளர் சீர்திருத்தக் குழுவின் பரிந்துரை என்ற பெயரில், 5 லட்சம் பணியிடங்களும் ஒழிக்கப்படவுள்ளன. புதிதாக உருவாகும் காலியிடங்களில் பெரும்பாலானவை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் என்பதால் அரசு வேலைவாய்ப்பு என்பதே இனி இல்லாமல் போய்விடும். இந்த இலக்கை நோக்கித்தான் தமிழக அரசு பயணிக்கிறது.

அரசு பணியிடங்கள் வருவாயை அதிகரிப்பதற்கான கருவிகள் ஆகும். அவற்றை ஒழிப்பதன் மூலம் அரசின் செலவுகளைக் குறைத்து விட முடியாது. எனவே அபத்தமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்களையும் நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலைகளை வழங்க வேண்டும். பணியாளர்கள் சீரமைப்புக் குழு அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். இதைச் செய்ய அரசு மறுத்தால் இளைஞர்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்தியுள்ள தமிழக அரசு, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து எந்த முடிவையும் இன்னும் அறிவிக்கவில்லை. இது அரசு ஊழியர்களின் சமூக, வாழ்வாதாரப் பாதுகாப்பு தொடர்புடைய விவகாரம் என்பதால் விரைவாக முடிவெடுத்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close