நீட்: ஓராண்டு விலக்கு தரும் மத்திய அரசு நிரந்தர விலக்களிக்க என்ன தடை? அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வு மத்திய அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றி நடத்தப்படுவதால் அதை எதிர்கொள்ளும் திறன் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு இல்லை

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. இதனால் எந்த பயனும் ஏற்படாது. மாறாக, தமிழகத்தின் மீது நீட் தேர்வு நிரந்தமாக திணிக்கப்படும்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டால் கிராமப்புற, ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதையும் தாண்டி மத்திய அரசு நீட் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதிலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்டங்களை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தது. கடந்த ஆறு மாதங்களாக மத்திய அரசின் ஆய்வில் இருக்கும் அந்த சட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தால் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு கிடைத்திருந்திருக்கும். ஆனால், அதை செய்ய மத்திய அரசும், அதற்கு அழுத்தம் கொடுத்து வெற்றி பெற மாநில அரசும் தவறிவிட்டன.

அதன்பின்னர் நீட் தேர்விலிருந்து இரு ஆண்டுகளுக்கு விலக்கு பெறுவதற்கான அவசரச் சட்டத்தை இம்மாதத் தொடக்கத்தில் மத்திய அரசிடம் தமிழக அரசு தாக்கல் செய்தது. ஆனால், அதற்கும் ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுத்து விட்டது. மாறாக, இப்போது 2017-18 ஆம் ஆண்டுக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை ஆகும். நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறுவதற்கான சட்டத்தில் கூறப்பட்டுள்ள காரணங்களும், ஓராண்டு விலக்கு பெறுவதற்கான அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள காரணங்களும் ஒன்று தான். கால அளவு மட்டுமே மாறுபடுகிறது. ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசரச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள காரணங்களை ஏற்றுக் கொண்டு அதற்கு விலக்களிக்கும் மத்திய அரசு, அதே காரணங்களைக் கொண்டுள்ள நிரந்தரச் சட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுப்பது ஏன்?

நீட் தேர்வு மத்திய அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றி நடத்தப்படுவதால் அதை எதிர்கொள்ளும் திறன் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் தான் நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசும், மாநில அரசும் கூறுகின்றன. அப்படியானால், ஓராண்டுக்குள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் திறனை மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் பெறுவார்களா? என்பதை அரசு விளக்க வேண்டும்.

தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் திறனை பெற வேண்டுமானால் அதற்கேற்ற பாடத்திட்டத்தை குறைந்தபட்சம் ஒன்பதாம் வகுப்பிலிருந்து பயில வேண்டும். தமிழ்நாட்டில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத் திட்டம் அடுத்த ஆண்டு தான் அறிமுகம் செய்யப்படுகிறது. அதனால் அவர்கள் 12-ஆம் வகுப்புக்கு வரும்போது நீட் தேர்வை அறிமுகம் செய்வது தான் பொருத்தமாக இருக்கும். அப்படியானால் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து 5 ஆண்டுகள் விலக்களிக்கப்பட வேண்டும்.

நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராவது ஒருபுறமிருக்க மருத்துவ மாணவர் சேர்க்கையை எந்த அடிப்படையில் நடத்துவது என்பதை தீர்மானிக்கும் மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவது எந்த வகையில் நியாயம்? இவ்வினாவை மத்திய அரசிடம் எழுப்பி போராடும் துணிச்சல் பினாமி அரசுக்கு இல்லாமல் போனது ஏன்? 1975-ஆம் ஆண்டு நெருக்கடி நிலைக் காலத்தின் போது மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி, மருத்துவக் கல்வி ஆகியவற்றை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்த இரு திராவிடக் கட்சிகளும் துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை என்பது தான் உண்மை. இரு கட்சிகளும் மாறி, மாறி செய்த துரோகங்களின் விளைவாகத் தான் தமிழகம் அனைத்து உரிமைகளையும் இழந்துவிட்டு தவிக்கிறது.

நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டம் நிறைவேற்றப்படும்பட்சத்தில் அது சட்டத்தின் முன் நிற்குமா? என்பதே விடை தெரியாத வினாவாகும். ஒருவேளை இதையெல்லாம் தெரிந்து கொண்டு தான் மக்களை ஏமாற்றுவதற்காக இப்படி ஒரு நாடகத்தை மத்திய, மாநில அரசுகள் அரங்கேற்றுகின்றனவோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இதற்கெல்லாம் மேலாக நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளியுங்கள் என தமிழக அரசு கோருவதே அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்பதற்கான உத்தரவாதம் ஆகும். இதனால் அடுத்த ஆண்டு முதல் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு திணிக்கப்படும். எனவே, இந்த ஏமாற்று வேலைகளை விடுத்து நீட் தேர்விலிருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் நிரந்தர விலக்கு அளிப்பதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close