கல்வியை சீரழித்த தி.மு.க. அரசு: ஆர்.டி.இ. திட்டத்தில் சேர மாணவர் ஆர்வம் குறைவு - அன்புமணி ராமதாஸ் சாடல்

மத்திய அரசு நிதி ஒதுக்காததைக் காரணம் காட்டி நடப்பாண்டில் இந்த மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்திருந்த தமிழக அரசு, கடந்த இரண்டாம் தேதி தான் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை வெளியிட்டது.

மத்திய அரசு நிதி ஒதுக்காததைக் காரணம் காட்டி நடப்பாண்டில் இந்த மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்திருந்த தமிழக அரசு, கடந்த இரண்டாம் தேதி தான் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை வெளியிட்டது.

author-image
abhisudha
New Update
RTE Tamilnadu

Anbumani Ramadoss| Tamil Nadu RTE Admission

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் மாணவர்களைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் அறிவிக்கை பெரும் தோல்வியைத் தழுவியுள்ளதாகப் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது அரசின் அலட்சியத்தால் மாணவர்களுக்குக் கிடைத்த தண்டனை என்றும் அவர் சாடியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கான தமிழக அரசு விடுத்த அறிவிக்கை படுதோல்வி அடைந்துள்ளது. தனியார் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்  இந்தத் திட்டத்தின்படி  சேர்க்கப்பட வேண்டிய இடங்களில் பாதியளவுக்கும் குறைவாகவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது அரசின் அலட்சியம் மற்றும்  தொலைநோக்குப் பார்வையற்ற தன்மைக்காக மாணவர்களுக்கு கிடைத்த தண்டனை ஆகும்.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இடங்கள் ஏழைக் குழந்தைகளை  சேர்ப்பதற்கான அறிவிக்கை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மே மாதம் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.  ஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்காததைக் காரணம் காட்டி நடப்பாண்டில் இந்த மாணவர் சேர்க்கையை  நிறுத்தி வைத்திருந்த தமிழக அரசு, கடந்த இரண்டாம் தேதி தான் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை வெளியிட்டது.  இதுவரை பள்ளியில் சேராத மாணவர்களும், ஏற்கனவே கட்டணப் பிரிவில் சேர்ந்த மாணவர்களும் இதன்படி விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தால்  அது பொருத்தமாக இருந்திருக்கும்.

ஆனால்,இதுவரை பள்ளிகளில் சேராத எந்த மாணவரும் புதிதாக விண்ணப்பித்து தனியார் பள்ளிகளில் சேர முடியாது. மாறாக,  ஏற்கனவே சேர்ந்த மாணவர்களில் கல்வி பெறும் உரிமைச் சட்டப்படியான மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றவர்கள் இருந்தால், அவர்கள் செலுத்தியக் கல்விக் கட்டணம்  திருப்பித் தரப்படும்; அவர்களின் எண்ணிக்கை  25%க்கும் கூடுதலாக இருந்தால், முதல் 25 விழுக்காட்டினருக்கு மட்டும் தான் வழங்கப்படும்  என்று அறிவித்தது தான்  இப்போது ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு காரணம் ஆகும்.

Advertisment
Advertisements

தனியார் பள்ளிகளில் நர்சரி பள்ளிகள் என்ற ஒரு பிரிவும், உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என்று இன்னொரு பிரிவும்  உள்ளன. நர்சரி பள்ளிகள் சற்று சாதாரணமானவையாகவும்,  ஏழைக் குழந்தைகள் அணுகும் வகையிலும்  இருக்கக்கூடும். அதனால் அந்த பள்ளிகளில்  மாணவர்கள் சற்று அதிக அளவில் சேந்துள்ளனர். மாறாக உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கட்டணம் அதிகம், மாணவர் சேர்க்கை  விதிகள் கடுமையானவை என்பதால் குறைந்த எண்ணிக்கையில் தான்  மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள்.   நர்சரி பள்ளிகளில்  கல்வி உரிமைச் சட்டத்தின்படி உள்ள 45,721 இடங்களுக்கு 65,306 விண்ணப்பங்கள் வந்திருப்பதில் இருந்தும்,  உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 34,666 இடங்களுக்கு வெறும் 16,006 பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பதிலும் இருந்து இதை உறுதி செய்து கொள்ளலாம்.

மாணவர் சேர்க்கை அறிவிக்கையை கடந்த 2-ஆம் தேதி தமிழக அரசு அறிவித்த போதே, இதுவரை பள்ளியில் சேராத மாணவர்களுக்கும்  வாய்ப்பளிக்கும் வகையில், மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.  அவ்வாறு செய்திருந்தால் அனைத்து மாணவர்களும் அவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ந்திருப்பார்கள். அதனால் சில பள்ளிகளில் உபரி இடங்களும், சில பள்ளிகளில் பற்றாக்குறை இடங்களும் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.  இது அரசின் தவறான அணுகுமுறையால் ஏற்பட்ட குழப்பம் ஆகும்.

இப்போது நர்சரி பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட 20 ஆயிரம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கான கட்டணத்தை அரசால் செலுத்த முடியாது. அதேநேரத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 18,600 இடங்களில் சேர மாணவர்கள் இல்லை. அதனால் அந்த இடங்களுக்குரிய பணம் தமிழக அரசிடம் உபரியாக இருக்கும். எனினும், அதை  கல்விப் பணிகளுக்கு பயன்படுத்த முடியாமல் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இதற்குத் தான் திமுக அரசு ஆசைப்பட்டதா? திமுக அரசு அதன் தவறான கொள்கைகளால் தான் தமிழகத்தில் பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வி ஆகிய இரண்டையும் சீரழித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தமிழ்நாடு.... கல்வியில் சிறந்த தமிழ்நாடு அல்ல....  மாறாக கல்வியில் சீரழித்த தமிழ்நாடு.

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் அந்த பயன் கிடைக்க வேண்டும்; அதே நேரத்தில் இந்தத் திட்டத்திற்கான மத்திய அரசின் நிதி பயன்படுத்தப்படாமல் வீணாகி விடக் கூடாது.  இதைக் கருத்தில் கொண்டு  கல்வி உரிமைச் சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்தி, தகுதியுடைய அனைவரும் பயனடைவதை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: