Advertisment

அடுத்தடுத்து உயிர் பலி; டாஸ்மாக்கில் விற்பது மதுவா? நஞ்சா? அமிலமா? அன்புமணி கேள்வி

"அரசு மதுக்கடைகளில் தொடர்ந்து மதுவை வாங்கி அருந்துபவர்கள் உயிரிழந்து விடுவார்கள் என்றால், உயிரைக் குடிக்கும் மதுவை ஏன் அரசு விற்பனை செய்ய வேண்டும்?" - அன்புமணி ராமதாஸ்

author-image
WebDesk
New Update
anbumani ramadoss

அரசு நிறுவனமான டாஸ்மாக்கை எதிர்த்து பா.ம.க., தலைவரான அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். மது பழக்கத்தினால் தொடர்ந்து தமிழ்நாட்டில் நிகழும் மரணங்களை குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Advertisment

அவர் கூறியுள்ளதாவது, "சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கள்ளுக்கடை என்ற இடத்தில் அரசு மதுக்கடையில் மது வாங்கி அருந்திய கல்லாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்ற 35 வயது இளைஞர் மதுக்கடை வாசலிலேயே மயங்கி விழுந்து இறந்திருக்கிறார். தமிழ்நாட்டில் மது குடித்த சில மணி நேரங்களிலேயே மக்கள் உயிரிழப்பது தொடர்ந்து நடப்பது அதிர்ச்சியளிக்கிறது.

சேகருக்கு தொடர்ந்து மது அருந்தும் வழக்கம் இருந்ததாகவும், அதனால் தான் அவர் உடல்நலம் பாதித்து மது குடித்தவுடன் இறந்து விட்டதாகவும் கூறி இந்த உயிரிழப்பை நியாயப்படுத்த காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் முயல்வது கண்டிக்கத்தக்கது. குடிப்பழக்கத்தால் 35 வயதிலேயே ஓர் இளைஞர் உயிரிழக்கிறார் என்றால் தமிழ்நாட்டு அரசு மதுக்கடைகளில் விற்கப்படுவது மதுவா, நஞ்சா, அமிலமா? என்ற வினாவிற்கு தமிழக அரசு தான் விடையளிக்க வேண்டும். மதுக்கடைகளில் விற்கப்படும் மது வகைகளின் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும்.

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சியில் அரசு மதுக்கடையில் கடந்த 17-ஆம் நாள் மது குடித்த முனியாண்டி, சிவக்குமார் ஆகியோர் திடீர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அதற்கு முன் தஞ்சாவூர், மயிலாடுதுறை, மதுரை, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மதுக்கடைகள் மற்றும் குடிப்பகங்களில் மது வாங்கி குடித்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த மதுக்கடை மரணங்கள் அனைத்தையும் சயனைடு கலந்த மது, தொடர்குடியால் உடல்நலம் பாதிப்பு என ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி தட்டிக்கழிக்கக் கூடாது. மதுக்கடை மரணங்கள் அனைத்துக்கும் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

அரசு மதுக்கடைகளில் தொடர்ந்து மதுவை வாங்கி அருந்துபவர்கள் உயிரிழந்து விடுவார்கள் என்றால், உயிரைக் குடிக்கும் மதுவை ஏன் அரசு விற்பனை செய்ய வேண்டும்? தமிழ்நாட்டில் அனைத்து மது வகைகளாலும் மக்கள் உயிரிழக்கும் கொடுமைக்கு முடிவு கட்ட, தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Anbumani Ramadoss Tasmac
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment