கதிராமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறுகளை மூடி விட்டு, அங்கிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் உள்ள எண்ணெய்க் கிணறுகளில் இருந்து குத்தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்களில் பெரும் உடைப்பு ஏற்பட்டு மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் வெளியேறியிருக்கிறது. இதனால் அச்சமடைந்து பாதுகாப்புக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
கதிராமங்கலம் கிராமத்தில் உலகத்தரம் வாய்ந்த குழாய்கள் பதிக்கப்பட்டு, அதன் மூலம் தான் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுவதாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், கச்சா எண்ணெய்க் குழாய்கள் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் வெடித்து சிதறியிருக்கின்றன என்றும் தனது அறிக்கையில் அன்புமணி சுட்டிக் காட்டியுள்ளார்.
மக்களின் நலனைப் புறக்கணித்து விட்டு செயல்படுத்தப்படும் எந்த திட்டமாக இருந்தாலும் அது கண்களை விற்று சித்திரம் வாங்கும் செயலாகவே அமையும். என குறிபிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், கதிராமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறுகளை மூடி விட்டு, அங்கிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கதிராமங்கலம் பகுதியிலிருந்து காவல்துறையினர் அனைவரையும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால் நானும் கதிராமங்கலம் கிராமத்தில் முகாமிட்டு மக்களுடன் இணைந்து போராடுவேன் எனவும் தனது அறிக்கை மூலம் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.