Advertisment

தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குக: அன்புமணி

சமீபத்தில், கேரளத்தில் தனியார் மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, அங்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.20,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
anbumani-ramadoss

தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு, அரசு செவிலியருக்கு இணையான ஊதியம் வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாங்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உயிர் காக்கும் மருத்துவத் துறையில் பணியாற்றும் பெரும்பாலான பணியாளர்களுக்கு, அவர்களின் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்வதற்குத் தேவையான ஊதியம்கூட வழங்கப்படுவதில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

உச்ச நீதிமன்ற ஆணைப்படி அமைக்கப்பட்ட ஊதியக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்த, மத்திய அரசு ஆணையிட்டும் அதை மாநில அரசுகள் மதிக்காதது கண்டிக்கத்தக்கது.

மருத்துவ சேவைத்துறையில் செவிலியர்களின் பணி மகத்தானது. நோயாளிகளைக் கனிவுடன் கவனித்துக்கொள்வதில் தொடங்கி, அவர்களின் சொந்த சோகங்களை மறைத்து புன்னகையுடன் பணிசெய்வது வரை அவர்களின் தியாகங்கள் அளவிட முடியாதவை. ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்பது மிக மிகக் குறைவு.

மாவட்டத் தலைநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. சென்னையில், சாதாரண மருத்துவமனைகளில் ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை மட்டுமே தொடக்க நிலை ஊதியமாக வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், செவிலியர்கள் வரையறுக்கப்பட்ட பணி நேரம் இல்லாமல் அதிக நேரம் பணிசெய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மொத்தத்தில் அவர்களின் நிலை பரிதாபமானது.

தனியார் மருத்துவமனை செவிலியர்களின் பரிதாபநிலை குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களின் வாழ்க்கை நிலை குறித்து ஆய்வுசெய்யவும், அவர்களுக்கான ஊதிய விகிதங்கள்குறித்து அரசுக்கு பரிந்துரைக்கவும் வல்லுநர் குழு அமைக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டது. அதன்படி ஆய்வுசெய்த குழு அளித்த பரிந்துரைகளின்படி, தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்குப் புதிய ஊதிய விகிதத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தது.

அதை உடனடியாகச் செயல்படுத்தும்படி மாநில தலைமைச் செயலாளர்களுக்குக் கடிதம் எழுதிய மத்திய அரசு, இதுதொடர்பாக சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றும்படியும் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் எந்த மாநிலத்திலும் செவிலியருக்கு  புதிய ஊதியவிகிதம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சமீபத்தில், கேரளத்தில் தனியார் மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, அங்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.20,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரிவான ஊதிய விகிதம் விரைவில் நிர்ணயிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், தனியார் மருத்துவமனை செவிலியர்களின் நிலை மிகமிகப் பரிதாபமாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு கூடுதல் ஊதியத்தைப் பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இது, தனியார் மருத்துவமனைகளின்  ஊதிய விகிதம் குறித்த பரிந்துரையைச் செயல்படுத்தும் நடவடிக்கைதான் என்பதால், அரசுக்கு எந்தச் செலவும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும், இதைச் செய்ய தமிழக அரசு தயங்குவது ஏற்கத்தக்கதல்ல.

மத்திய அரசு வழங்கியுள்ள அறிவுரைப்படி 50 படுக்கைகளுக்குக் குறைவாக உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு, குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.20,000 வழங்கப்பட வேண்டும். 50 முதல் 100 படுக்கை வரை உள்ள மருத்துவமனைகளின் செவிலியர்களுக்கு, அரசு செவிலியருக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 25 சதவிகிதம் குறைவாகவும், 100 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனை செவிலியர்களுக்கு 10 சதவிகிதம் குறைவாகவும், 200 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளின் செவிலியர்களுக்கு, அரசு ஊதியத்துக்கு இணையான ஊதியமும் வழங்கப்பட வேண்டும்.

இதற்கான சட்டத்தை உடனடியாக நிறைவேற்றி, தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு, அரசு செவிலியருக்கு இணையான ஊதியம் வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Anbumani Ramadoss Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment